தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மீதான விவாதம் நடைபெற்றது.
ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தமிழ்நாட்டில் 4 சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் உள்ளிட்ட 18 அறிவிப்புகளைப் பேரவை கூட்டத்தில் இன்று வெளியிட்டார்.
அந்த அறிவிப்புகள் வருமாறு:
தமிழ்நாடு சிட்கோ மூலம், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சீரான தொழில் வளர்ச்சி ஏற்படுத்திட, திருச்சி மாவட்டம் - மணப்பாறை, திருவள்ளூர் மாவட்டம் - காவேரிராஜபுரம், செங்கல்பட்டு மாவட்டம் - கொடூர் மற்றும் மதுரை மாவட்டம் - சக்கிமங்கலம் ஆகிய நான்கு இடங்களில் மொத்தம் 394 ஏக்கர் பரப்பளவில், ரூ. 218.22 கோடி மொத்த திட்ட மதிப்பில் 4 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். இதன் மூலம் மொத்தம் சுமார் 7,000 நபர்கள் வேலைவாய்ப்பினைப் பெறுவர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சிப்காட்டிடமிருந்து, 120 ஏக்கர் நிலம் பெறப்பட்டு ரூ.85 கோடி திட்ட மதிப்பில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்காக புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும். இதன் மூலம், சுமார் 2,000 நபர்கள் வேலைவாய்ப்பினைப் பெறுவர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், காவேரிராஜபுரம் கிராமத்தில் ரூ.65 கோடி திட்ட மதிப்பில் 144 ஏக்கரில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும். இதன்மூலம், சுமார் 2,500 நபர்கள் வேலைவாய்ப்பினைப் பெறுவர்.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், கொடூர் கிராமத்தில் 98 ஏக்கரில் ரூ.45.94 கோடி திட்ட மதிப்பில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும். இதன்மூலம், சுமார் 1,500 நபர்கள் வேலைவாய்ப்பினைப் பெறுவர்.
மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், சக்கிமங்கலம் கிராமத்தில் ரூ.22.28 கோடி திட்ட மதிப்பில் 32 ஏக்கரில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும். இதன் மூலம், சுமார் 1,000 நபர்கள் வேலைவாய்ப்பினைப் பெறுவர். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.