கொரோனா மூன்றாம் அலை பரவல் காரணமாக மனித உயிர்கள் முக்கியமானது என கருதியே தமிழ்நாடு அரசு பொதுவெளியில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்கவில்லை என இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 143 பேருக்கு 31 லட்சம் ருபாய் மதிப்பீட்டில் தையல் இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இயந்திர இருசக்கர வாகனங்கள் உள்பட அரசு நலத்திட்ட உதவிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜய ராணி ஆகியோர் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “சாலை விபத்தில் மரணமடைந்தோர், சாலை விபத்தில் காயமடைந்தோர், தையல் பயிற்சி முடித்தோர், கைம்பெண் உதவித்தொகை ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சென்னை மாவட்டம் சார்பில் 3வது முறையாக நலத்திட்ட உதவிகள் தற்போது வழங்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் மனு கொடுத்து காத்திருந்தவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க ஆட்சியில் அரசு நலத்திட்டங்கள் தகுதி உள்ளவர்களுக்கு தாமதமில்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்து சமய அறநிலைத்துறை சார்ந்த இடங்களை சமூக விரோதிகள், ஆக்கிரமிப்பாளர்கள் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.
கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.” என்றார்.
தடையை மீறி சிலை வைக்கப்படும் என தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்து குறித்து பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, “மிரட்டல் உருட்டல்களுக்கு பயப்படும் ஆட்சி இல்லை. மனித உயிர்கள் முக்கியமானது எனக் கருதும் தி.மு.க ஆட்சி” எனத் தெரிவித்தார்.