தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, பா.ம.க உறுப்பினர் ஜி.கே.மணி, "தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களின் விற்பனையைத் தடுக்க அரசு முன்வருமா?" என கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10,670 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 11,247 பேர் கைது செய்யப்பட்டுள்ளது.15 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் போதைப் பொருள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும். பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்குக் கடுமையாகத் தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தில் புதிய திருத்தம் கொண்டு வரப்படும்" என தெரிவித்துள்ளார்.