தமிழ்நாட்டில் கொரோனா பரவலையொட்டி பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தொற்றுப் பரவல் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி (நாளை) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுப் பாடங்கள் நடத்தப்பட உள்ளன. இதையொட்டி பள்ளிகளில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும் பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. அதில் ஆசிரியர், ஆசிரியைகள், பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், தங்களின் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பப் பெற்றோர் அச்சப்படத் தேவையில்லை எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “பள்ளிகளில், ஒரு நாளில் 5 வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிக்கு வருவதால், மாணவர்கள் உளவியல் ரீதியாகத் தயாரான பிறகு மட்டுமே வகுப்பெடுக்க வேண்டும். உடனே பாடம் எடுக்க ஆரம்பிக்கவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வாரத்தில் 6 நாட்கள் காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை பள்ளிகள் இயக்கப்படும். தற்போதைய சூழலில் அடிப்படை விஷயங்களை மட்டுமே கற்றுக்கொடுக்கப்படும் என்பதால், மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என்கிற கட்டாயமில்லை.” எனத் தெரிவித்தார்.
பள்ளிகள் செயல்படுவதற்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு:
* 9 முதல் 12ஆம் வகுப்பு வரை 50 சதவிகித மாணவர்களுடன் பள்ளிகள் நடைபெறும்.
* வகுப்புகளில் தலா 20 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்பட வேண்டும்.
* பள்ளிகளில் 9 முதல் 12-ஆம் வகுப்புகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்படும்.
* பள்ளிக்கு வர விருப்பமில்லா மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வழியிலும் பாடங்களை கற்கலாம்.
* பள்ளி நுழைவுவாயில் மற்றும் வெளியே செல்வதற்கு தனித்தனி வாயில்கள் பின்பற்றப்பட வேண்டும்.
* மாணவர்கள் ஒருவருக்கொருவர் உணவுகளை பகிர்ந்து உண்ண கூடாது. அதேபோல குழுவாக இடைவேளை நேரங்களில் மாணவர்கள் அமரக்கூடாது.
* பள்ளி வளாகங்களில் விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் காலை நேர வழிபாட்டுக் கூட்டங்கள் ஆகியவை நடத்தக்கூடாது.
* பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு வளாகங்கள் வகுப்பறைகளில் உள்ள மேசை நாற்காலி மற்றும் பள்ளி வளாகங்கள் முழுவதுமாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
* அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
* ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.
* பள்ளி வளாகங்களில் கைகளை கழுவுவதற்கு உரிய தண்ணீர் வசதி மற்றும் சோப்பு வைத்திருக்க வேண்டும். அதேபோல சுகாதாரத்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் கிருமிநாசினி வழங்கப்படும்.