தமிழ்நாடு

“இனியொரு மரணம் வேண்டாம்; பேனர் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம்”: மு.க.ஸ்டாலின் கண்டிப்பான உத்தரவு!

கொடிக் கம்பம் நடும்போது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தை அறிந்து துயருற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்சித் தொண்டர்களுக்கு கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

“இனியொரு மரணம் வேண்டாம்; பேனர் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம்”: மு.க.ஸ்டாலின் கண்டிப்பான உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

விழுப்புரம் அருகே திருமண விழா ஒன்றில் கொடி நடும் பணியில் ஈடுபட்ட 13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், பேனர், கொடிக் கம்பம், வரவேற்பு வளைவுகள் போன்ற ஆடம்பரங்களில் ஈடுபட வேண்டாம் என தொடர்ந்து கடுமையாக வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், கொடிக் கம்பம் நடும்போது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தை அறிந்து துயருற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழக நிகழ்ச்சிகளுக்காக பேனர் வைப்பது, வரவேற்பு வளைவுகள் வைப்பது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதை தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு சில நேரங்களில் உயிரைப் பறிக்கும் சோகமும் நடந்துவிடுகிறது. விழுப்புரத்தில் கொடிக்கம்பம் நட முயன்றபோது மின்சாரம் தாக்கி இளம் வயதான தினேஷ் மரணம் அடைந்திருப்பது எனக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேனர் கலாச்சாரம் உள்ளிட்ட ஆடம்பரங்களைப் பலமுறை கண்டித்த பின்னும் இதுபோன்ற விரும்பத்தகாத - கண்டிக்கத்தக்க செயல்கள் தொடர்வது என்னை வருத்தமடைய வைக்கிறது. உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கழகத்தினர் என் வேண்டுகோளைக் கட்டளையாக ஏற்றுச் செயல்படுத்தக் கோருகிறேன்.

13 வயதே ஆன தினேஷை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. அவரது குடும்பத்தாரின் துயரில் பங்கேற்று, துணைநிற்கிறேன்.

இனி, இதுபோன்றவை நடக்காமல் தடுப்பதே உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories