வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். ஆகஸ்ட் 1ஆ1ம் தேதி மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி மீரா மீதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் ஆகஸ்ட் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், தன்னைப்பற்றி அவதூறாக செய்தி பரப்பியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசியபோது, வாய் தவறி குறிப்பிட்ட சமுதாயத்தைப் பற்றி பேசியதாக ஜாமின் மனுவில் நடிகை மீரா மிதுன் கூறியுள்ளார்.
இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதரார் பேச்சு சமுதாயத்தில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துவதாகவும் மோதலை தூண்டும் விதத்தில் உள்ளது. தொடர்ந்து இதேபோன்ற குற்றச் செயலில் ஈடுபட்ட வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். மீரா மிதுன் மீது ஏற்கனவே 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரது ஆண் நண்பர் இந்த வீடியோக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றார். எனவே இவர்களுக்கு ஜாமின் வழங்கக்கூடாது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
அதேபோல புகார்தாரரான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைபொதுச் செயலாளர் வன்னியரசு சார்பிலும் ஜாமின் வழங்க ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் தொடர்ந்து இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி செல்வகுமார், புலன் விசாரணை ஆரம்ப நிலையிலேயே உள்ளதாகவும், சிறையில் அடைத்து மிகக்குறுகிய காலமே ஆகியுள்ளதாலும் ஜாமின் வழங்க முடியாது எனக் கூறி இருவரின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.