புதிதாகக் கடை திறப்பவர்கள், தங்கள் கடை விரைவாக மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக நடிகர்கள் அல்லது பிரபலமானவர்களை வைத்து கடைகளைத் திறப்பது வழக்கம்.
தருமபுரி மாவட்டம், அரூர் பஜார் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் புதிதாக ஜவுளிக்கடை ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த கடையை யாரை வைத்து திறக்கலாம் என யோசித்தபோது, கொரோனா காலத்தில், தங்களது உயிரைத் துச்சமென கருதி மக்கள் பணியில் ஈடுபட்ட முன்களப் பணியாளர்களை வைத்து கடையைத் திறக்கலாம் என முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து தூய்மைப் பணியாளர் சாந்தி என்பவரை அழைத்து, கடையை ரிப்பன் வெட்டி திறக்க வைத்துள்ளார் செந்தில்குமார். மேலும் கடையில் முதல் விற்பனையையும் அவரே தொடங்கி வைத்தார். அதோடு அரூர் பேரூராட்சியில் பணிபுரியும் அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் இனிப்பு மற்றும் பரிசுகளை வழங்கி செந்தில்குமார் கவுரவித்துள்ளார்.
செந்தில்குமாரின் இந்தச் செயல், மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்காக அவரைப் பலரும் பாராட்டி வருகிறார்கள்.