அ.தி.மு.க முன்னாள் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன், கொடநாடு மர்மங்கள் தொடர்பாக வெளிச்சத்திற்கு வராத உண்மைகள் விரைவில் வெளியாகும் என கடந்த மாதம் ட்வீட் செய்த நிலையில், சயான் போலிஸாரிடம் பரபப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா உள்ளிட்டோருக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. இங்குள்ள சொகுசு பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு கொள்ளை நடைபெற்றது. அப்போது காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ், கோவையைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையே கனகராஜ் சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். மற்ற 10 பேரை போலிஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் சயானிடம் மீண்டும் போலிஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கொடநாடு கொள்ளைச் சம்பவம் தொடர்பாக முக்கிய தகவல்களை வாக்குமூலமாக அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக அ.தி.மு.கவின் முன்னாள் தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னை மண்டல செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் கடந்த ஜூலை 20ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் “கொடநாடு கொலை வழக்கு இறுதி கட்டத்துக்கு வந்துவிட்டதாக மிகவும் உயர்மட்டத்தில் உள்ள வட்டாரங்கள் கூறுகின்றன. சில விறுவிறுப்பான ஒப்புதல் வாக்குமூலங்கள் மற்றும் உண்மைகளுக்காக காத்திருங்கள்” என்று ட்விட்டரில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
மற்றொரு ட்வீட்டில், “கொடநாடு எஸ்டேட்டில் காவலர் கொலை செய்யப்பட்டு கொள்ளை முயற்சி, கார் டிரைவர் விபத்தில் மரணம் என அவிழ்க்கப்படாத முடிச்சுகள். ஆதாரங்களுடன் அதிர வைக்கும் விடைகள்… Game Over Bro…” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அ.தி.மு.கவின் முக்கியப் புள்ளிகள் சிக்குவார்களா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.