தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது, தி.மு.க ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி, தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக இன்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை காகிதமில்லா இ-பட்ஜெட்டாக, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (ஆக. 14) காலை 10 மணி முதல் கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்து பேசினார்.
அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு : -
விளைப்பொருட்களை பெருநகர சந்தைகளுக்கு எடுத்துச் செல்ல இலகு ரக சரக்கு வாகனங்கள் வாங்க முன்னுரிமை வழங்கப்படும்.
2020-2021 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கரும்பின் பிழிதிறனை அதிகரிக்கும் வகையில் சிறப்புத் திட்டத்துக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டையில் தென்னை வளர்ச்சி வாரிய துணை மண்டலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கோத்தகிரி பகுதி பழங்குடியின விவசாயிகள் உற்பத்தி செய்யும் சிறுதானியங்களுக்கு பதப்படுத்தும் மையம் தொடங்கப்பட்டும்.
புரதச்சத்து மிக்க பயறு வகைகள், கூட்டுறவு சங்கங்கள் நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டும்.
3.13 லட்சம் ஹெக்டேராக உள்ள பழப்பயிர் சாகுபடி பரப்பு 3.30 லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும்.
மானாவாரி நிலத்தொகுப்பில் பயன் தரும் மரக்கன்றுகளை வளர்ப்பதற்கு நிதியுதவி வழங்கப்படும்.
2021-22 ஆம் ஆண்டில் பயிர்க்காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த ரூ.2,327 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.