மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில் பணியாளர்களுக்கு ஊதியம் ரூபாய் 300 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்ற பட்ஜெட் அறிவிப்பு கிராம பெண்கள் வரவேற்றுள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2021 -2022ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார்.
அப்போது அவர் நிதிநிலை அறிக்கை வாசித்தபோது, "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிநாட்கள் 100 நாளிலிருந்து 150 நாளாக உயர்த்த வலியுறுத்தப்படும்.
அதேபோல், ஊரக வேலை உறுதித்திட்ட ஊதியத்தொகை ரூ. 300 ஆக உயர்த்தப்படும். கிராமப்புறங்களில் ரூ.400 கோடி செலவில் தூய்மை இந்தியா இயக்கம் செயல்படுத்தப்படும்" உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியிட்டார்.
தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு ஊரக வேலை உறுதித்திட்டத்தில் வேலை செய்யும் பெண்கள் வரவேற்றுள்ளனர். மேலும் இந்த அறிவிப்பு குறித்து நிதி அமைச்சர் அறிவித்த உடனேயே சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காரிப்பட்டியில் வேலை செய்து வந்த பெண்கள் கைதட்டி உற்சாகமாக வரவேற்பு தெரிவித்தனர்.
இந்த அறிவிப்பு மூலம் தி.மு.க அரசு தொடர்ந்து மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையும், ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதிலும் கவனம் செலுத்தி வருவது மகிழ்ச்சி அளிப்பதாகப் பெண்கள் தெரிவித்துள்ளனர்.