முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, தமிழ்நாட்டில் பள்ளி பாடப்புத்தகங்களில் உள்ள தமிழ் சான்றோர்களின் பெயர்களில் பின்னால் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் பாடப்புத்தகத்தில், சுவாமிநாத ஐயரின் ‘பண்டைய காலத்து பள்ளிகூடங்கள்’ என்ற தலைப்பில் ஒரு பாடம் உள்ளது. அவர் உ.வே என்று குறிப்பிடப்படுள்ளது. சாலைகள் மற்றும் பிற குறிப்புகளில் சாதி பெயர்களை நீக்க முன்னதாக மாநில அரசு பிறப்பித்த உத்தரவின்படி பெயர் மாற்றப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, தற்போது ஐயர் என்பது நீக்கப்பட்டு தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரின் பெயர், சாமிநாதர் என அச்சிடப்பட்டுள்ளது. உ.வே.சா. ஆசிரியரான மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பது மீனாட்சி சுந்தரனார் என மாற்றப்பட்டுள்ளது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை என்பது ராமலிங்கம் என மாற்றப்பட்டுள்ளது. மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்பது வேதநாயகம் என பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாடு அரசின் இத்தகைய நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சத்தமில்லாமல் பல்வேறு மாற்றம் நடந்து வருவதாகவும் புகழாரம் சூட்டியுள்ளனர்.