சேலம் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை வகித்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியார்களை சந்தித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், “ரேஷன் கடைகளில் 3,997 விற்பனையாளர், எடையாளர் காலிப்பணியிடங்கள் உள்ளன. அவற்றை விரைவில் நிரப்பவுள்ளோம். 4,451 வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க் கடன் வழங்கப்பட்டதில் பல்வேறு புகாரின் பேரில் நடந்து வரும் ஆய்வு 31ம் தேதி (நாளை) முடிகிறது. எதுவுமே பயிரிடப்படாத தரிசு நிலத்திற்கும் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வகையில் எத்தனை பேருக்கு, எத்தனை கோடி அளவிற்கு கடன் வழங்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளது என்பதை ஆய்வு செய்து வருகிறோம். கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டதிலும் முறைகேடு நடந்துள்ளது. மத்திய கூட்டுறவு வங்கியிலோ, சம்பந்தப்பட்ட சொசைட்டியிலோ பணம் இல்லை. ஆனால் நகைக்கடன் கொடுக்கப்பட்டதாக கணக்கு இருக்கிறது.
நகையை அடகு வைத்து, அந்த தொகையை வைப்புநிதியாக கணக்கில் கொண்டு வந்துள்ளனர். 11 சதவீத வட்டிக்கு நகையை அடகுவைத்து, 7 சதவீத வட்டிபெறும் வகையில் வைப்புநிதியாக டெபாசிட் செய்திருக்கிறார்கள். இந்த வகையில் ரூ.400 முதல் ரூ.500 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. பணம் மதிப்பிழப்பின் போது கூட்டுறவு வங்கிகளில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மாற்றப்பட்டது தொடர்பாக விஜிலென்ஸ், சி.பி.ஐ விசாரணை நடந்துள்ளது. அதில் நடந்த முறைகேடு பற்றி ஆய்வு செய்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.