குழந்தை இலக்கியம் தொடர்புடைய பாடங்களை மேம்படுத்த அரசு ஒரு கோடி நிதி ஒதுக்கியுள்ளதாகவும், குழந்தை இலக்கியப் படைப்பாளிகளை அணுகி வாழ்வியல் தொடர்புடைய பாடங்களை சுலபமான முறையில் பாடலாகவும் ,செய்முறை விளக்கமாகவும், குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், குடிமைப் பணிகளுக்கான பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்கள் பயன்படும் வகையில் ஏற்படுத்தி தரப்பட்டுள்ள தளம் , பல ஆயிரம் ஓலைச்சுவடிகளை பாதுகாக்கும் தளம் , கல்வி தொலைக்காட்சி உள்ளிட்ட இடங்களை ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன் பூங்கொத்து மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்துவிட புத்தகங்களை கொடுங்கள் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி 2 லட்சம் புத்தகங்களை பெற்று 50 நூலகங்களுக்கு வழங்கி தனி பெருமை பெற்றுள்ளார் என்று புகழாரம் சூட்டினார்.
இதே போன்று குடியரசுத் தலைவரை சந்தித்த போதும் பிரதமர் மற்றும் சோனியா காந்தியை சந்தித்த போதும் முக்கிய புத்தகங்களை வழங்கியுள்ளார் என்றும், தமிழ் மொழியையும் தமிழ் இலக்கியத்தையும் பல மொழி பேசுபவர்கள் இடமும் சென்றடைய வேண்டும் என்று முதல்வர் பல்வேறு பணிகளை பாடத்திட்ட கழகத்துக்கு அளித்துள்ளார் என்று கூறினார்.
தமிழக பாடநூல் கழகத்திற்கு சிலப்பதிகாரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யவும் , பொன்னியின் செல்வன் புத்தகத்தை மலையாள மொழியில் மொழி பெயர்க்க முதல்வர் அறிவிறுத்தியுள்ளதாகவும் அந்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். 100 சங்க இலக்கிய பாடல்கள் மொழிபெயர்ப்பு துறை வெற்றிகரமாக செய்து வருகிறது .
கல்வி தொலைக்காட்சியில் வாரம் ஒருமுறை இயற்பியல் வேதியியல் ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களை மாணவர்களுக்கு சுலபமான முறையில் ஆசிரியராக தானே நடத்தி தருவதாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்துள்ளார்.
குழந்தை இலக்கியம் தொடர்புடைய பாடங்களை மேம்படுத்த அரசு ஒரு கோடி நிதி ஒதுக்கியுள்ளதாகவும், குழந்தை இலக்கியப் படைப்பாளிகளை அணுகி வாழ்வியல் தொடர்புடைய பாடங்களை சுலபமான முறையில் "பாடல்கள் மூலம் பாடம்," என்ற வகையிலும் , செய்முறை விளக்கமாகவும் , குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
57 சிறந்த புத்தகங்களை நாட்டுடைமை ஆக்கி, குடிமைப் பணிகள் தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் ரூ.57 லட்சம் நிதி ஒதுக்கி புத்தகங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அண்ணா நூலகத்தில் ஐஏஎஸ் போன்ற குடிமை பணிகளுக்கு தயாராகும் மாணவர்கள் 300 பேர் அமரும் வகையில் உள்ளது. மேலும் 300 பேர் அமரும் வகையில் இடம் சீர்செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வருக்கும் கல்வித்துறை அமைச்சருக்கும் வைப்பதாக தெரிவித்தார்.