செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை பணிகள் தொடர்பாக செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார். உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை தாங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, " தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி, குடும்ப அட்டை வேண்டி தகுதியுள்ளவா்கள் யார் விண்ணப்பத்தினாலும் 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், 1,362 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. இதனை விரைந்து பாரிசிலீக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,700 மின்னனு குடும்ப அட்டைகள் புதியதாக வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 3,000 குடும்ப அட்டைதாரர்களைக் கொண்ட கடைகள் 5,500 உள்ளன. இம்மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 192 கடைகள் 3,000 குடும்ப அட்டைதாரா்களை கொண்ட கடைகள் உள்ளன. 1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகளை பிரித்து வழங்கும்படி அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினா்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் நடமாடும் கடைகளை மாற்றி பகுதி நேர நியாயவிலைக் கடைகளாக மாற்றிட கோரிக்கை வைத்துள்ளனா். இந்தக் கோரிக்கைகளை துறை ரீதியாக விரைந்து பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் 8,000 ஆயிரம் நியாய விலைக் கடைகள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. அதற்கு சுமார் ரூ. 18 கோடி வாடகை செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காணும் விதமாக ஊரக வளா்ச்சி முகமை மூலமாக சொந்த கட்டிடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகள் சிரமமின்றி பயன்பெறும் வகையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மாவட்டத்தில் தேவைக்கேற்ப கூடுதலாக அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளவும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்கள் நெல்லினை கொடுத்து உடனடியாக பணம் பெற்றிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நெல் கொள்முதல் நிலையங்களிலிருக்கும் நெல்லினை உடனடியாக அரிசி ஆலைக்கு அனுப்பிடவும், மேலும், மாவட்ட ஆட்சித் தலைவர் மாதத்திற்குக் குறைந்தபட்சம் 20 நியாய கடைகளை ஆய்வு செய்திடவும் மக்களுக்கு தேவையான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் 34 நியாய விலை கடைகளின் மூலம் குடும்ப அட்டைதாராகளுக்கு அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. 2,500 லிட்டா் அரவைத்திறன் கொண்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு நவீன அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. இவற்றை தவிர 6 அரவை முகவர்களும் செயல்பட்டு வருகின்றனா். இதன் காரணமாக இம்மாவட்டத்தில் அரிசி பற்றாக்குறை இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, செங்கல்பட்டு மாவட்ட உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை சார்பாக, 20 நபர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் சக்கரபாணி ஆகியோர் வழங்கினர்.