தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (24.7.2021) தலைமைச் செயலகத்தில், நீர்வளத்துறையின் செயல்பாடுகள், துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம், புதியதாகச் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் ஆகியவை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளைப் புனரமைத்து, தூர்வாரி, நீரின் கொள்ளளவை அதிகப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்வதோடு, புதிய நீர்நிலைகளை உருவாக்கிடவும், மழைநீர் மூலம் கிடைக்கும் நீரை முழுமையாகச் சேமித்துப் பயன்படுத்த, அணைகள் இல்லாத மாவட்டங்களில் புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்களைக் குறிப்பாகத் தடுப்பணைகளை உருவாக்கிட வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.
மாநில நிதி பணிகளான காவிரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் தூர்வாரும் பணிகள், அத்திக்கடவு - அவினாசி நீர்ப்பாசனம், நிலத்தடி நீர்ச் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கும் திட்டம், மேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டம், காட்டூர் - தத்தமஞ்சு ஏரிகளின் கொள்ளளவினை மேம்படுத்தி நீர்தேக்கம் அமைக்கும் திட்டம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கழுவேலி ஏரி மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கொளவாய் ஏரிகளை மீட்டெடுக்கும் திட்டம் குறித்தும் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் அவர்கள், நபார்டு நிதியுதவியுடன் புதிய தடுப்பணைகள் கட்டுதல், அணைக்கட்டுகள் மற்றும் நீர்நிலைகளைப் புனரமைப்புச் செய்தல், செப்பனிடுதல், புனரமைத்தல் மற்றும் புதுப்பித்தல் (Repair, Renovation and Restoration (RRR)) திட்டத்தின்கீழ், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நடைபெறும் புனரமைப்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம் (TamilNadu Irrigated Agriculture Modernisation Project) மற்றும் அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் குறித்தும் (Dam Rehabilitation and Improvement Project), நதிநீர் இணைப்புத் திட்டங்களான காவேரி-குண்டாறு இணைப்புத் திட்டம், தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு இணைப்புத் திட்டங்களின் முன்னேற்றம், நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்குதல் (Extension, Renovation, Modernisation (ERM) திட்டத்தின்கீழ் நொய்யல் உப வடிநிலம் புதிய கட்டளைக் கால்வாய், இராஜவாய்க்கால், கீழ்பவானித் திட்டம், கல்லணைக் கால்வாய், காவேரி உப வடிநிலம் ஆகியவற்றில் நடைபெறும் புனரமைப்புத் திட்டங்கள் முக்கொம்பு மேலணை, ஆதனூர் குமாரமங்கலம் மற்றும் நஞ்சை புகளூர் ஆகிய இடங்களில் கட்டப்படும் கதவணை ஆகியவற்றின் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், நீர்வள ஆதாரத்தை அதிகரிக்கும் வகையில் புதிய தடுப்பு அணைகள் மற்றும் புதிய நீர்நிலைகளை உருவாக்கிடவும், விவசாயிகளின் நலன்கருதி பல ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாமல் இருக்கும் நீர்நிலைகளைச் செப்பனிடவும், கால்வாய்களைச் சரி செய்யவும் முன்னுரிமை வழங்கிப் பணிகளை விரைந்து மேற்கொள்ள முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., பொதுப்பணித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப., நிதித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், இ.ஆ.ப., பொதுப்பணித்துறைச் சிறப்புச் செயலாளர் டி.ரவீந்திரபாபு, நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் கு.இராமமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.