சென்னை நெசப்பாக்கம் திருவள்ளுவர் சாலையில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பங்கிற்கு நேற்று இரவு அ.தி.மு.க கொடி கட்டிய கார் ஒன்று வந்துள்ளது. அந்த காரில் நான்கு பேர் இருந்துள்ளனர்.
பின்னர், பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ஆயிரம் ரூபாய்க்கு டீசல் போடுமாறு காரில் வந்தவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து காரில் டீசல் நிரப்பிவிட்டு ஊழியர் அவர்களிடம் பணம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர்கள் “நாங்கள் அ.தி.மு.க நிர்வாகிகள். பணம் தர முடியாது” என மிரட்டும் தொனியில் கூறியுள்ளனர். பிறகு பங்கிலிருந்த ஊழியர்களும் அங்கிருந்த பொதுமக்கள் சிலரும் டீசல் நிரப்பியதற்குப் பணம் தரவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, “அ.தி.மு.க கொடி கட்டிய காரில் வந்தவர்கள் பணம் எல்லாம் தர முடியாது. எங்களைத் தடுக்க முற்பட்டால் கத்தியால் குத்தி விடுவோம்” என கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். பிறகு அதே காரில் அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.
இது குறித்து எம்.ஜி.ஆர். நகர் போலிஸார் வழக்குப் பதிவு செய்து, பங்கிலிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அ.தி.மு.க கொடி கட்டிய காரில் வந்த நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.