சென்னை என்றதும் அனைவரின் நினைவுக்கு வருவது மெரினா கடற்கரைதான். இந்தியாவின் மிக நீண்ட மற்றும் உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை இதுவாகும். கலங்கரை விளக்கம், உழைப்பாளர் சிலை, சுதந்திரபோராட்ட வீரர்கள், தலைவர்களின் சிலைகள் போன்றவை வரிசைக்கட்டியுள்ள மெரினா கடற்கரையில் சென்னை மாநகராட்சியின் புது முயற்சியால், உலோகங்களால் ஆன பிரம்மாண்டமான கடல்வாழ் உயிரின சிற்பங்கள் புதுவரவாக வந்துள்ளன.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் வாகனங்களின் உலோக உதிரிபாகங்கள் டன் கணக்கில் சேர்கின்றன. இவ்வாறு தேங்கும் உதிரிபாகங்களை கொண்டு உபயோகமாக என்ன செய்யலாம் என திட்டமிட்ட சென்னை மாநகராட்சி நிர்வாகம் சிற்பங்களாக செய்து அதனை பொதுமக்கள் கூடும் இடங்களில் வைக்க முடிவு எட்டப்பட்டுள்ளது.
அதன்படி முதற்கட்டமாக மெரினா கடற்கரை நடைபாதையை ஒட்டியுள்ள புற்கள் நிறைந்த தரையில் பிரம்மாண்டமான சுறாமீன் , நண்டு, இறால் போன்ற கடல்வாழ் உயிரின சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கே வரும் பொதுமக்கள் அதனை ஆர்வத்துடன் கண்டுகளித்து செல்ஃபி எடுத்துக் கொள்கின்றனர்.
விஜயவாடாவை சேர்ந்த சிற்பக் கலைஞர் சீனிவாசன் என்பவரால்தான் வீணாக கிடந்த வாகன உதிரிபாகங்கள் சிற்பங்களாக உயிர்ப்பெற்றுள்ளன. இரண்டு சக்கர வாகனங்களின் பெட்ரோல் டேங்க், கைப்பிடி, நட், போல்டு , ராடு, கார்களின் சக்கரம், மேற்கூரை , எஞ்சின் பாகங்கள் என அனைத்தும் இந்த சிற்பங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், மெரினா கடற்கரையில் வைக்கப்பட்டுள்ளது போல் தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதை அருகே வைக்கப்பட்டுள்ள சிற்பம் மற்றும் சென்னை விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளை சிற்பம் சென்னைக்கு கூடுதல் அழகை சேர்த்துள்ளது. இதேபோல் வரும் நாட்களில் தலைமை செயலகம், பெசன்ட்நகர், கோயம்பேடு என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பார்வையாளர்களை கவர சுமார் 15 இடங்களிலும் சிற்பங்களை வைக்க மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது என கூறியிருக்கிறார் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங்பேடி.
மணல் சிற்பம், கல் சிற்பம், மரச்சிற்பம் போன்று இப்போது வாகன உதிரிபாகங்களால் ஆன நவீன சிற்பங்களும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. பொதுமக்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைவதோடு, அவர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பையும் விழிப்புணர்வையும் பெற்றுள்ளது.