தமிழ்நாடு

விவாகரத்து கேட்டு வந்த பெண்ணுடன் குடித்தனம்.. வழக்கறிஞரை வெட்டிக்கொன்ற குடும்பத்தினர்: அதிர்ச்சி சம்பவம்!

திருவள்ளூர் அருகே முறைதவறிய காதல் விவகாரத்தில் வழக்கறிஞர் ஒருவர் பெண்ணின் குடும்பத்தினரால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

விவாகரத்து கேட்டு வந்த பெண்ணுடன் குடித்தனம்.. வழக்கறிஞரை வெட்டிக்கொன்ற குடும்பத்தினர்: அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஆஞ்சநேயபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அலறல் சத்தம் கேட்டதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, போலிஸார் அப்பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது ஆண் ஒருவர் ரத்தவெள்ளத்தில் கீழே கிடந்துள்ளார். அதனருகே பெண் ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் மயக்கத்தில் இருந்துள்ளார்.

இதையடுத்து, அப்பெண்ணை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலிஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருவள்ளூரை அடுத்த வெள்ளரி தாங்கல் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடேசன். காக்களூர் ஆஞ்சநேயபுரம் பகுதியில் கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்தவர் சத்யா (வயது 30).

சத்யா தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு வழக்கறிஞரான வெங்கடேசனை நாடி அடிக்கடி வந்துள்ளதாகவும் அதனால் ஏற்பட்ட பழக்கத்தினால் சத்யாவை தனியாக அழைத்து வந்து வழக்கறிஞர் வெங்கடேசன் காக்களூரில் குடித்தனம் வைத்துள்ளார்.

இதுபற்றி அறிந்ததும் சத்யாவின் பெற்றோர் கண்டித்துள்ளனர். ஆனால் சத்யா, வெங்கடேசனுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு காக்களூர் ஆஞ்சநேயபுரத்தில் உள்ள சத்யாவின் வீட்டிற்கு சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவரது தந்தை சங்கர், தாய் செல்லம்மாள், தம்பி வினோத் மற்றும் உறவினர்கள் 10-க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர்.

அப்போது வழக்கறிஞர் வெங்கடேசனுக்கும், சத்யாவின் குடும்பத்தினருக்கும் இடையேவாய்த்தகராறும், கைகலப்பும் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சத்யாவின் குடும்பத்தினர் திடீரென வழக்கறிஞர் வெங்கடேசனை சரமாரியாக வெட்டினர்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சத்யா அவர்களை தடுக்க முயன்றார். இதில் அவருக்கும் பலத்த வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த வெங்கடேசனும், சத்யாவும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார். சத்யா மயக்க நிலையில் இருந்தார். அவரும் இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் நினைத்து தப்பிச் சென்றுள்ளனர்.

அக்கம்பக்கத்தினர் தகவல் அளித்ததால் அங்கு சென்ற திருவள்ளூர் தாலுகா காவல்துறையினர் வெங்கடேசனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories