திண்டுக்கல் மாவட்டம், குரும்பபட்டி பகுதியைச் சேர்ந்த சென்றாயனை கடந்த மார்ச் 10ம் தேதி அவரது வீட்டில் போலிஸார் தூக்கிட்ட நிலையில் மீட்டுள்ளனர். அப்போது போலிஸார் நடத்திய விசாரணையில் சென்றாயன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சென்றாயனின் தந்தை மொக்கைராசு, தனது மகன் இறப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இதையடுத்து போலிஸார் மீண்டும் வழக்கு விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
பின்னர், சென்றாயன் மனைவி வனிதாவின் நடவடிக்கைகள் சில மாற்றங்களை ஏற்பட்டதை அடுத்து போலிஸாருக்கு அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து போலிஸார் வனிதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது வனிதா கூறிய தகவலைக் கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
போலிஸாரின் விசாரணையில், வனிதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் அய்யனார் என்பவருக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்தது. இது சென்றாயனுக்கு தெரியவரவே மனைவியைக் கண்டித்துள்ளார். இதையடுத்து மனைவியும், ஆசிரியரும் சேர்ந்து சென்றாயனை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
இதையடுத்து, சம்பவத்தன்று ஆசிரியர் அய்யனாரை வீட்டுக்கு வனிதா அழைத்துள்ளார். அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சென்றாயனை இருவரும் சேர்ந்து கொலை செய்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் ஜோடித்து நாடகமாடியது தெரியவந்துள்ளது. பின்னர், போலிஸார் தற்கொலை வழக்கைக் கொலை வழக்காக மாற்றி வனிதாவைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆசிரியர் அய்யனாரை போலிஸார் தேடி வருகின்றனர்.