திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அர்சத் அஜ்மல். இளைஞரான இவர் தனது உடல் எடை குறைப்பதற்காக விலை உயர்ந்த சைக்கிளைப் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஜூன் 27ம் தேதி இரவு தனது குடியிருப்பில் சைக்கிளை விட்டுவிட்டுச் சென்றுள்ளார்.
பின்னர், காலை வந்து பார்த்தபோது சைக்கிள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து குடியிருப்பிலிருந்த சிசிடிவியை பார்த்தபோது ஒருவர் சைக்கிளைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அர்சத் அஜ்மல், திருடுபோன தனது சைக்கிளைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என கோரி ட்விட்டரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் சைக்கிளைத் திருடும் சி.சி.டி.வி காட்சியையும் அஜ்மல் வெளியிட்டிருந்தார்.
பிறகு, இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து, சி.சி.டி.வி காட்சியை கொண்டு அந்த நபரைத் தேடினர். இதையடுத்து சைக்கிளைத் திருடிச் சென்றது திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வர பாண்டியன் என்பது தெரியவந்தது. பிறகு அவரிடமிருந்த சைக்கிளை போலிஸார் மீட்டனர்.
பின்னர் போலிஸார் அஜ்மலை தொடர்பு கொண்டு சைக்கிள் மீட்கப்பட்டதாகவும், திருடிய நபர் கைது செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தனர். இந்த தகவலைத் தொடர்ந்து தனது சைக்கிளைக் கண்டுபிடித்த காவல்துறைக்கு நன்றி என தெரிவித்து அஜ்மல் ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.