சென்னை கோட்டூர் ஜிப்ஸி காலணிப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இதனைநகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன்,"தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் ஒரு கோடியே 67 லட்சத்து 88 ஆயிரத்து 460 தடுப்பூசிகள் வரப்பெற்றுள்ளன. அவற்றில் ஒரு கோடியே
62 லட்சத்து 61 ஆயிரத்து 985 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. கையிருப்பில் 7 லட்சத்து 53 ஆயிரம் வரை உள்ளன. ஜூலை மாதத்திற்கான தடுப்பூசிகளை விரைந்து வழங்கக்கோரி கேட்டுபெற மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் டெல்லி சென்று அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் எடுத்துச் சொன்னதின் அடிப்படையில் சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட ஜிப்ஸி காலணி நரிக்குறவர் சமூக மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கப்பட்டுள்ளது. ஜிகா வைரஸ் பாதிப்பு குறித்து மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைகளை கேட்டறிந்துள்ளோம்.
அந்த வகையில், கேரளாவில் ஜிகா வைரஸ் பரவும் தமிழ்நாடு எல்லையை ஒட்டிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்து 660 வீடுகளில் நேரடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் யாருக்கும் பாதிப்பு இல்லை. இதுவரை 32 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கள ஆய்வில் ஈடுபட்டுள்ளோம்.
மேலும், கொரோனா சிகிச்சையால் இதர நோய்களுக்கான எந்த சிகிச்சையும் தடைபடக்கூடாது என அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். ஜிகா வைரஸ் கர்ப்பிணிகளை அதிகமாக தாக்கும் என்பது யூகம் தான். ஏனென்றால் கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்போடு இருந்த கர்ப்பிணி பெண், நல்லமுறையில் குழந்தை பெற்றுள்ளார். தாயும் சேயும் நலமுடன் உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கருப்பு பூஞ்சை நோயை பொறுத்தவரை, அதன் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனை அணுக வேண்டும். தேவையான மருந்துகள் அரசிடம் கையிருப்பில் உள்ளன. தனியார் மருத்துவமனைகளும் கூட ஆன்லைனில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்" என தெரிவித்துள்ளார்.