தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக அலுவலகத்தில் பொறுப்பெற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திண்டுக்கல் ஐ.லியோனிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
பின்னர் திண்டுக்கல் ஐ.லியோனி செய்தியாளர்களிடம் பேசியதாவது, “10 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற எனக்கு தற்போது பாடநூல் கழகத்தில் ஒரு மிகப்பெரிய பொறுப்பை முதலமைச்சர் வழங்குகிறார். மாணவர்கள் பாடநூலினை விரும்பி மகிழ்ச்சியாகவும் எளிமையாகவும் மாணவர்கள் சந்தோஷப்படும் அளவிற்கு பாடநூலினை உருவாக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க பாடநூல் கழகம் முயற்சி செய்யும். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் இலக்கியப் பணிகள் குறித்தும், கல்விக்காக அவர் ஆற்றிய பணிகள் குறித்தும், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி பெற வேண்டும் என்று அவர் எடுத்த முயற்சிகள் குறித்தும், வருங்காலத் தலைமுறையினர் பாடநூல் வழியாக தெரிந்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசுத்துறையில் முதலமைச்சரின் தேர்வுகள் அனைத்தும் சரியாக உள்ளது. பாடநூல் கழகத்தில் புத்தகங்களில் மாணவர்கள் பயிலும் பாடங்களை அச்சடிப்பது மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு பயன்படும் வகையில், வாழ்க்கை கல்வி முறையினையும் தேர்வுக்குத் தயாராகும் முறையினையும், திறன் வளர்ப்பு முறையினையும் கற்றுக் கொள்ளும் வகையில் பாடத் திட்டங்கள் உருவாக்கப்படும்.
கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு பாடநூல் கழக புத்தகங்களின் முதல் பக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயர் நீக்கப்பட்டது இது அரசியலுக்காக செய்யப்பட்டது. ஆனால், தற்பொழுது முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கல்விக்காக செய்த சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில் அவரது பெயர் மருபடியும் சேர்க்கபப்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.