கூட்டுறவு அமைச்சகம் என்ற பெயரில் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு புதிய அமைச்சகத்தை உருவாக்கியுள்ளது. மோடி அரசு இந்த அமைச்சத்தை உருவாக்கியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதுமட்டுமல்லாது, மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கவே மோடி அரசு கூட்டுறவு அமைச்சத்தை உருவாக்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, மாநில அரசுகளின் நிர்வாகத்தில் கூட்டுறவு அமைச்சகம் முக்கியப் பங்காற்றுகிறது. தமிழ்நாட்டில் கூட்டுறவு அமைச்சகம் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒன்றிய அரசு தனியாக கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்கியுள்ளது மாநில அரசுகளின் அதிகாரங்களில் தலையிடும் முயற்சியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஜி.எஸ்.டி வரி நிலுவைத்தொகைகளை வழங்காமல் மாநிலங்களுக்கு வரவேண்டிய வருவாயை குறைத்தும் மாநில மொழிகளை புறக்கணித்து, இந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு, அதிகாரம் அனைத்தும் தன்னிடமே குவிக்கும் வகையில் செயல்படுகிறது என்று அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டுறவு அமைச்சகம் மாநிலங் களுக்கு உதவுமா?அல்லது தலையீடுகளை செய்து, அதிகாரத்தை பறிக்குமா? என்பதை ஒன்றிய அரசின் செயல்பாட்டின் மூலம்தான் தெரியவரும் என்று அரசியல் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஒன்றிய அரசின் புதிய கூட்டுறவுத்துறை அமைச்சர் என்று அமித்ஷாவை அறிவித்திருக்கிறார்கள். கூட்டுறவுத்துறை என்பதும் கூட்டுறவு சங்கங்கள் என்பவையும் முழுக்க முழுக்க மாநில அரசின் அலுவலே ஆகும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 7வது அட்டவணை இதை உறுதி செய்துள்ளது. ஆனால் இதற்கு மாறாக, கூட்டாட்சி அமைப்பின் மீது மற்றுமொரு தாக்குதலாக ஒன்றிய அரசு புதிதாக கூட்டுறவுத்துறையைஉருவாக்கி அதற்கு அமித்ஷாவை அமைச்சராக நியமித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளை தனது கூட்டுக் களவாணிகளுக்காக சூறையாடிய ஒன்றிய அரசு, இப்போது நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளையும் அதில் குவிந்துள்ள எளிய மக்களின் சேமிப்பு பணத்தையும் குறி வைத்திருக்கிறது என்பதை நேற்றைய தினம் சுட்டிக்காட்டியிருந்தோம். அதை உறுதி செய்யும் விதமாகவே அமித்ஷா நியமிக்கப்பட்டுள்ளார். இது மோடி அரசின் மிக சமீபத்திய சீர்குலைவு நிகழ்ச்சி நிரல். மேலும் அதீதக் கொள்ளை நடக்கப் போகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.