கொரோனா காலகட்டத்தில் குழந்தைகள் பாதிப்பு குறித்தும், மூன்றாவது அலையில் குழந்தைகள் பாதிக்காதவாறு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் குழந்தைகள் தொடர்பான துறை அதிகாரிகளுடனான தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்றது.
இதில் ஆணைய உறுப்பினர்கள், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு , காவல்துறை அதிகாரிகள் என அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனைகள் பெறப்பட்டு விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, “மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் கன்னியாகுமரி தொடங்கி நடைபெறுகிறது. மாவட்ட வாரியான ஆய்வுக்கூட்டம் நடத்தி மூன்றாவது அலை வந்தால் குழந்தைகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கில் வீட்டிலிருப்பதாலும், பள்ளிக்குச்செல்லாதனாலும் குழந்தை திருமணம் உள்ளிட்ட பலதவறுகள் நடந்துள்ளது. இனிவரும் காலங்களில் அது போன்ற தவறுகள் நடக்ககூடாது என்ற வகையில் விழிப்புணவர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை தமிழ்நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வீட்டிலிருக்கும் குழந்தைகளை பெற்றோர்கள் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். ஆன்லைனில் படிக்கிறார்கள் என்பதால் கண்காணிக்காமல் இருக்ககூடாது. கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் விபரம், பாதுகாப்பு குறித்து சமூக நல்துறையினர் கணக்கெடுத்து பாதுகாத்து வருகின்றனர். தற்போது வரை கொரோனாவால் பெற்றோர்கள் இருவரை இழந்த குழந்தைகள் 93 பேரும், 1 பெற்றோரை இழந்த குழந்தைகள் 3593 பேரும் உள்ளனர். இந்த எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. அனுமதியின்றி செயல்படும் குழந்தைகள் காப்பகங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.