புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று ஆய்வு மேற்கொண்டு அங்கு மேற்கொள்ள வேண்டிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் இதுவரை எப்படி இருந்தாலும் பரவால்லை இனிமேல் நடைபெறும் பணிகள் தரமாக இருக்கவேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர் அங்கு உள்ள உடற்பயிற்சி கூடத்தில் அமைச்சர் மெய்யநாதன் உடற்பயிற்சி மேற்கொண்டார்.
இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், “கடந்த ஆட்சியில் அனைவருக்கும் கல்வி இயக்க(SSA) திட்டத்தின் சார்பில் மாணவர்களுக்கு விளையாட்டு பொருட்கள் வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. அந்த முறைகேடுகள் குறித்து முதலமைச்சர் விரைவில் நடவடிக்கை எடுப்பார்.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழகத்தைச் சேர்ந்த 11 பேரில் 5 பெண் வீரர்கள் இடம் பெற்று இருப்பது பெருமைக்குரிய செயலாகவுள்ளது. மேலும், மாவட்டந்தோறும் உள்ள விளையாட்டு மைதானங்களில் விளையாட்டு பயிற்சியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். விளையாட்டு மாணவர்கள் பயிற்சி மேற்கொள்ள பல்வேறு மாவட்டங்களில் சின்தட்டிக் மைதானங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வாகியுள்ளது 11 பேருமே அரசு விளையாட்டு பயிற்சி மையங்களில் பயிற்சி மேற்கொண்டவர்கள் என்பது பெருமைக்குரிய விஷயம்” எனத் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியார் கவிதாராமு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.