தமிழ்நாடு

6 வாரங்களுக்குப் பின் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்துகள் இயக்கம்... வழிபாட்டுத் தலங்கள் திறப்பு!

இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.

6 வாரங்களுக்குப் பின் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்துகள் இயக்கம்... வழிபாட்டுத் தலங்கள் திறப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளைத் தொடர்ந்து அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இன்று முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களை திறக்கப்பட்டுள்ளன.

கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவியதால் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பரவல் குறையத் தொடங்கியதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

ஜூலை 12-ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்ஹாக்கள் இன்று திறக்கப்பட்டன. இன்று முதல் இ - பாஸ், இ-பதிவு முறை ரத்து செய்யப்பட்டு மாநிலம் முழுவதும் பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளன.

உணவகங்கள், விடுதிகள், தங்கும் விடுதிகள் 50% பேருடன் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை இயக்கப்படும். தேநீர்க்கடைகள் 50% கூட்டத்தோடு அனுமதிக்கப்படும். கேளிக்கை கூடங்கள், உடற்பயிற்சி மையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன.

தகவல் தொழில்நுட்ப சேவை மையங்கள் 50% மக்களோடு அனுமதிக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.

இன்று முதல் திறக்கப்படுவதையொட்டி, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணிகள் நேற்று நடைபெற்றன. இதுபோல், பள்ளிவாசல்கள், தேவாலயங்களையும் சுத்தப்படுத்தி, தயார்படுத்தும் பணி நடைபெற்றது.

வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வோர் தனிமனித இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் வழிபடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories