விதிகளை மீறி ரூ.150 கோடி மதிப்புள்ள வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை அ.தி.மு.க மாஜி அமைச்சரின் பினாமிக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு பத்திரப்பதிவு அதிகாரிகள் உடந்தையாக இருந்ததும், பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதும் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.
சென்னை முகப்பேரில்தான் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், தொழில் அதிபர்கள் வசித்து வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் வசிப்பது ஒரு கவுரவமாக கருதப்படுகிறது. இதனால் சென்னையில் மற்ற பகுதிகளை விட இந்த பகுதியில் உள்ள நிலங்களின் மதிப்பு அதிகம். முகப்பேர், அய்பியா நகர் 2வது குறுக்குத் தெருவில் 2 ஏக்கர் 61 சென்ட் நிலமும், 44 சென்ட் நிலமும் தமிழக வீட்டு வசதி வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இரண்டு இடத்தின் மொத்த பரப்பளவு 3 ஏக்கர் 5 சென்ட் ஆகும். இதன் வழிகாட்டி மதிப்பு ரூ.85 கோடியே 35 லட்சத்து 77 ஆயிரம். ஆனால் தற்போது மார்க்கெட் மதிப்பு ரூ.150 கோடியாகும்.இந்த நிலம் தங்களுக்குச் சொந்தமானது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இரு நிலத்தையும் வீட்டு வசதி வாரியம் கையப்படுத்தியது.
5 ஆண்டுகளுக்கு மேல் வீட்டு வசதி வாரியம் கைப்பற்றிய நிலத்தை பயன்படுத்தவில்லை என்றால் அவற்றை உரிமையாளர்கள் கோரும் பட்சத்தில் திருப்பி அளிக்க வேண்டும் என்று சட்டத்தில் இடம் உள்ளது. அதன்படி 5 ஆண்டுகளுக்கு மேல் வீட்டு வசதி வாரியம், அந்த இடத்தை பயன்படுத்தவில்லை. இதனால் இடம் தங்களுக்கு திருப்பி அளிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் 26 பேர் சேர்ந்து மனு தாக்கல் செய்தனர்.
இந்த 26 பேரும் தாங்கள் உறவினர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் என்று கூறித்தான் இடத்தை திருப்பி அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் சென்றனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசின் சட்டப்படி 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலத்தை அரசு பயன்படுத்தாமல் உள்ளது. இதனால் அந்த நிலத்தை வாரிசுதாரர்களுக்கு திருப்பி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில், வீட்டு வசதி வாரியம் சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், வீட்டு வசதி வாரியம் மேல்முறையீடு செய்ததை 26 பேரும் மறைத்துள்ளனர். மேலும், பதிவுத்துறை விதிமுறைகளை மீறி நீதிமன்ற உத்தரவை மட்டும் காட்டி, நிலத்தின் உரிமையாளர்கள் என்று உரிமை கோரிய 26 பேரும் சேர்ந்து, இந்த நிலத்தை கொன்னூரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யாமல், வேளச்சேரியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் கோவையைச் சேர்ந்த கே.வி.ஜெயராமன், லோகநாதன் ஆகியோருக்கு 2017ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளனர்.
அதேநேரத்தில் வீட்டு வசதி வாரியத்தின் நிலத்தை இவ்வளவு தைரியமாக பத்திரப்பதிவு செய்வதற்கு முழு காரணமாக கூறப்படுவது, கே.வி.ஜெயராமன் என்பவர், மேற்கு மண்டலத்தை அதிமுக ஆட்சிக் காலத்தின்போது ஆட்டிப்படைத்து வந்த ஒரு மணியான அமைச்சரின் பினாமி என்று கூறப்படுகிறது. மாஜி அமைச்சரின் உத்தரவின்பேரில் அவரது உதவியாளரே வேளச்சேரி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேரடியாக வந்து பதிவு செய்து கொடுத்துள்ளார். வழக்கமாக ஒரு இடத்தின் சொத்தை வேறு இடத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட பதிவு அலுவலகத்தின் அனுமதியை பெற வேண்டும்.
அதன்படி அப்போது பத்திரப்பதிவு அதிகாரியாக இருந்த சரவணக்குமார், கொன்னூர் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு கடிதம் மூலம் எழுதி, இந்த விற்பனை குறித்த அறிக்கையை கேட்கிறார். கொன்னூரில் உள்ள பதிவு அதிகாரி 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி, வேளச்சேரி பத்திரப்பதிவு அதிகாரி சரவணக்குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், இது வீட்டு வசதி வாரியத்தின் பெயரில் உள்ள சொத்து.
நில உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளனர். வழக்கில் மனுதாரர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு உள்ளது. ஆனால் வீட்டு வசதி வாரியம் மேல் முறையீடு சென்றதாக இதுவரை தகவல் இல்லை என்று கூறியுள்ளார். தற்போது வீட்டு வசதி வாரியம்தான் நிலத்தின் உரிமையாளர் என்றபோது, அந்த துறையினர்தான் நிலத்தின் உரிமை கோருபவர்களுக்கு எழுதிக் கொடுக்க வேண்டும். மேலும், இந்த நிலத்தை பணம் கொடுத்துதான் வீட்டு வசதி வாரியம் வாங்கியுள்ளது.
ஆனால் வீட்டு வசதி வாரியத்துக்கு தெரியாமல், நிலத்தின் உரிமை யார் பெயருக்கும் மாறாமல் இருக்கும்போது 26 பேர் சேர்ந்து, 2 பேருக்கு எழுதிக் கொடுத்ததுபோன்று பத்திரப்பதிவு செய்துள்ளது விதிமுறை மீறல் என்று தெரியவந்துள்ளது. இதன் மூலம் வீட்டு வசதி வாரியத்துக்கும் ரூ.86 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதேநேரத்தில் வீட்டு வசதி வாரியம், நில உரிமையாளர்களுக்கு பதிவு செய்து கொடுக்கும்போது ரூ.10 கோடி, நிலத்தின் உரிமையாளர்கள், கோவையைச் சேர்ந்த 2 பேருக்கு எழுதிக் கொடுக்கும்போது ரூ.10 கோடி என ரூ.20 கோடி வரை பத்திரப்பதிவுத்துறைக்கு வருமானம் கிடைத்திருக்கும். ஆனால் அமைச்சரின் பினாமி என்ற காரணத்துக்காக வேளச்சேரியில் உள்ள பதிவுத்துறை அதிகாரிகள், பணம் வாங்கிக் கொண்டு வீட்டு வசதி வாரிய நிலத்தை விதிமுறைகளை மீறி விற்பனை செய்ய துணைபோயுள்ளது தெரியவந்துள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் இதுபோல வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான பல நூறு கோடி மதிப்புள்ள பல சொத்துக்கள் பத்திரப்பதிவு அதிகாரிகளின் துணையுடன் மாற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தி, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.
ரூ.85 கோடிக்கு பதில் ரூ.11 கோடிக்கு பதிவு எட்டு மடங்கு குறைத்து மோசடி!
முகப்பேரில் வழிகாட்டு மதிப்பு சதுர அடிக்கு ரூ.6,500 என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் ரூ.85.35 கோடிக்கு பதிவு செய்ய வேண்டும். ஆனால் வேளச்சேரியில் உள்ள பதிவு அலுவலகத்தில் 11.26 கோடிக்கு பதிவு செய்துள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும் வீட்டு வசதி வாரியம், நிலத்தின் உரிமையாளர்களுக்கு எழுதிக் கொடுத்தால்தான் அவர்களது பெயருக்கு சொத்து மாறும்.
அவ்வாறு வழிகாட்டு மதிப்பின்படி எழுதிக் கொடுக்கும்போது வீட்டு வசதி வாரியம் ரூ.10 கோடியை அரசுக்கு கொடுத்திருக்கும். பின்னர் நிலத்தின் உரிமையாளர்கள் கோவையைச் சேர்ந்தவர்களுக்கு விற்கும்போது அதே அளவுக்கு அரசுக்கு வருமானம் வந்திருக்கும். ஆனால், வீட்டு வசதி வாரியத்தின் சொத்தை, உரிமை கோருபவர்களின் பெயருக்கு மாற்றாமல், அந்த 26 பேரும் சேர்ந்து குறைந்த விலைக்கு, அதாவது வழிகாட்டி மதிப்பை விட 8 மடங்கு குறைவாக விற்பனை செய்துள்ளனர். இதன் மூலமும் அரசுக்கு இரட்டிப்பு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
திட்டமிட்டு அரசுக்கு ரூ.10 கோடி இழப்பு!
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைப் பெற்ற 26 பேரும், அந்த உத்தரவை காட்டி, 3 ஏக்கர் 5 சென்ட் நிலத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று வீட்டு வசதி வாரியத்தில் முறையீடு செய்ய வேண்டும். வீட்டு வசதி வாரியம், 26 பேருக்கும் நிலத்தை கொன்னூர்(அம்பத்தூரில் உள்ள அலுவலகம்) பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிரப்பதிவு செய்து கொடுக்கும். இதுதான் விதிமுறை. நடைமுறையும் கூட. இவ்வாறு பதிவு செய்தால், அந்தப் பகுதியில் உள்ள நில மதிப்பீட்டின்படி ரூ.86.35 கோடி என்பதால் அரசுக்கு ரூ.10 கோடியை வரியாக கட்ட வேண்டியது வரும். அதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக வேறு ஒரு பத்திர பதிவு அலுவலகத்தில் மாஜி அமைச்சரின் அறிவுரைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு ரூ.10 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு இடத்துக்கு 2 தரப்பிடம் பணம் வாங்கிய 26 பேர்
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 3 ஏக்கர், 3 சென்ட் நிலத்தை, அதன் உரிமையாளர்களிடம் இருந்து கையகப்படுத்தியபோது அவர்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அந்த பணத்தை பெற்றபோதே நிலத்தின் மீது உள்ள அவர்களின் உரிமை தானாக வீட்டுவசதி வாரியத்துக்கு சென்றுவிடும். இதனால் இந்த நிலத்தின் தற்போது உரிமையாளர் வீட்டு வசதி வாரியம்தான்.
எனவே, அந்த நிலத்தை விற்க நினைத்தால், வீட்டு வசதி வாரியம்தான் பத்திரப் பதிவு செய்து கொடுக்க வேண்டும். ஆனால் வீட்டு வசதி வாரியத்துக்கு தெரிவிக்காமல், சட்ட விதிகளுக்கு புறம்பாக நீதிமன்ற உத்தரவை மட்டும் வைத்துக் கொண்டு 26 பேரும் சேர்ந்து, கோவையைச் சேர்ந்த இருவருக்கும் விற்பனை செய்து விட்டனர். இந்த 26 பேரும் வீட்டுவசதி வாரியம் மற்றும் கோவை நபர்களிடம் இருந்து ஒரே நிலத்தை காட்டி 2 முறை கோடிக்கணக்கில் பணத்தை பெற்று அரசை ஏமாற்றி உள்ளனர்.