அழுத்தமான தீர்வுகள், கண்ணியமான பேச்சுக்கள் என கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சட்டப்பேரவையின் மாண்புகள் அனைத்தும் மீண்டும் மீட்கப்பட்டுள்ளதை நிரூபிக்கும் வகையில் இருந்தன சட்டமன்ற நிகழ்வுகள். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு அதிக நேரம் ஒதுக்கினார் சபாநாயகர் அப்பாவு. அதனை அனுமதிக்கவும் செய்தார் முதல்வர் ஸ்டாலின்.
முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் முதல்வராக இருந்த ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவருமே, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் அவ்வளவாக ரசித்ததில்லை. எதிர்க்கட்சிகளை எதிரிக்கட்சிகளாகவே நினைத்துக்கொண்டு, அவர்களின் விமர்சனங்களுக்கு பதிலளிப்பதை விட்டுவிட்டு, அமைச்சர்கள் பலரும் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்றுகுறுக்கீடுகள் செய்வதும்... அநாகரிகமான வார்த்தைகளை வீசுவதுமாக நடந்து கொண்டார்கள். அத்தகைய சம்பவங்கள் எதுவும் தற்போதைய பேரவையில் நடக்கவில்லை.
இதுபற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற கொறடா எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ., "கூச்சல்களையும் ரகளைகளையுமே கடந்த 10 ஆண்டுகளாக சந்தித்து வந்துள்ள இந்த சட்டப்பேரவை, நீண்ட வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் நாகரிகமான நிகழ்வுகளைப் பார்க்கிறது. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களின்போது அமைச்சர்களின் குறுக்கீடுகளில்லாமல் பார்த்துக் கொண்டார் முதல்வர் ஸ்டாலின். எதிர்க்கட்சிகள் பேசி முடித்த பிறகே அவர்களின் விமர்சனங்களுக்கு தகுந்த விளக்கத்தை சம்மந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் முன்வைத்தனர். அதேபோல, அ.தி.மு.க. ஆட்சியில் செய்தவைகளாக அக்கட்சி உறுப்பினர்கள், தவறான தகவல்களை பேசும் போது, அது தவறானது என்பதையும் சுட்டிக்காட்ட தி.மு.க. அமைச்சர்கள் தவறவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, ‘ஆயிரக்கணக்கான அம்மா கிளினிக்குகளை திறந்தோம்’ எனச் சொன்னார். அவர் பேசி முடித்ததும், "அப்படிச். செயல்படும் 10 கிளினிக்குகளை காட்ட முடியுமா" என்று கேள்வி எழுப்பினார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். இதற்கு எடப்பாடியால் பதில் சொல்ல முடியவில்லை. அவையின் நடவடிக்கைகளுக்கிடையில் பேரவையின் மரபுகளையும் மாண்புகளையும் முதல்வர் ஸ்டாலினும் அவை முன்னவர் துரைமுருகனும் எடுத்துரைத்தனர். என்னைப் போன்ற புதுமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பாடம் நடத்துவது போலிருந்தது" என்கிறார்.
நிதி நெருக்கடி, நீட் தேர்வு ரத்து, கொரோனா பரவல், பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு, கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு, மின் தடை, பயிர்க் கடன்கள் தள்ளுபடி, மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைத்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எதிர்கொண்டது இந்த சட்டப்பேரவை கூட்டம். அமைச்சர்கள் அனைவருக்கும் சுதந்திரம் தந்திருந்தார் ஸ்டாலின். அதனாலேயே என்னமோ ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், பழனிவேல் தியாகராஜன், சேகர் பாபு, சக்கரபாணி, செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலரும் புள்ளி விபரங்களுடன் தூள் கிளப்பினார்கள். தி.மு.க. ஆட்சியில்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாக குற்றம் சாட்டினார் எடப்பாடி பழனிச்சாமி. இதற்கு ஆதாரபூர்வமாக மறுப்பு தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒரு ஆவணத்தை காட்டி, "நீட் தேர்வுக்கு ஒப்புதல் தர முடியாது என அன்றைய குடியரசு தலைவர் கையெழுத்திட்டிருக்கும் ஆவணம்தான் இது. அதாவது, நீட் தேர்வுக்கான சட்ட முன்வடிவை 2010-ல் மத்திய அரசு தயாரித்துத் தந்தபோது, நீதிமன்றத்தில் அதற்கு தடையாணை பெற்றார் அன்றைக்கு, முதல்வராக இருந்த கலைஞர்.
அதோடு, குடியரசு தலைவரிடத்திலும் அனுமதி பெற்று தமிழகத்தில் நீட்டை வரவிடாமல் செய்தார். அதேபோல, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை நீட் வரவேஇல்லை. நீங்கள் முதல்வரானதற்குப் பிறகுதான் தமிழகத்தில் நீட் தலைதூக்கியது" என்று எடப்பாடி பழனிச்சாமியை பார்த்து பதிலுரைத்தார். இதற்கு எடப்பாடி மீண்டும் மீண்டும் தி.மு.க.வையே குற்றம்சாட்டினார். அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "நீட்டால் எத்தனையோ பேரை நாம் இழந்திருக்கிறோம். அதனால், பிரதமரிடம் ஒரு முறைக்கு இரண்டு முறை அழுத்தம் கொடுத்து பேசியிருக்கிறேன். நிச்சயம் நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கும். அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நீங்களும் தோள் கொடுங்கள், வெற்றி பெறுவோம்" என்றார். அதன் பிறகே இந்த விவாதம் ஓய்ந்தது. அதேபோல, கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறந்தது குறித்தும், மின் தடை ஏற்படுவது குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியபோது, "அ.தி.மு.க. ஆட்சியில் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதில் நடந்த 12,000 கோடி ஊழல்கள் மற்றும் மின் உபகரணங்கள் பராமரிக்கப்படாதது குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி கொடுத்த விரிவான பதிலடியில் அமைதியாக இருந்தார் எடப்பாடி.
அதேபோல டாஸ்மாக் குற்றச்சாட்டை எதிர்கொண்ட செந்தில் பாலாஜி, "2020, மே 7-ந் தேதி மதுக்கடைகள் திறந்தபோது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 4.1 சதவீதம். அதுவே மே 8-ல் 4.3 சதவீதமாக உயர்ந்தது. இதனால் மதுக்கடைகளுக்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம். ஆனால், நீங்கள் என்ன செய்தீர்கள் உச்ச நீதிமன்றம் சென்று மதுக் கடைகளுக்கு அனுமதி பெற்று திறந்தீர்களா இல்லையா கொரோனாவை கட்டுப்படுத்த எங்கள் அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் 27 மாவட்டங்களில் தொற்றின் பாதிப்பு குறைந்துள்ளது. அந்த மாவட்டங்களில் மட்டும்தான் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதர 11 மாவட்டங்களில் மதுக் கடைகளைத் திறக்க அனுமதிக்கவில்லை" என்று ஆவேசம் காட்டினார். கொரோனாவை கட்டுப்படுத்தியது யார் என்கிற விவாதம் வந்தபோது, எடப்பாடி பழனிச்சாமியின் கேள்விகளுக்கு பதிலளித்த - துரைமுருகன், "கொரோனா குறித்து நாங்கள் எச்சரிக்கை செய்தபோது, உங்களை நாங்கள் காப்பாற்றுகிறோம்' என சொன்னீர்கள். ஆனா, காப்பாற்றவில்லை... நானேதான் என்னை காப்பாற்றிக் கொண்டேன்" என சபையை கலகலப்பாக்கினார். முந்தைய ஆட்சிக் காலத்தில் அதிகமாக எதிரொலித்த புகழுரைகளோ, மேஜைகளின் சத்தமோ இந்த சட்டமன்றத்தில் இல்லை.
எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் சட்டமன்றத்தின் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மற்றும் பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரும் ஸ்டாலினின் ஆளுமையை புகழ்ந்தபோது, அதனை ஸ்டாலின் பெரிதாக ரசிக்கவில்லை. ஒரு முறை தனது பேச்சில்,‘என்னை புகழ்வதைக் காட்டிலும் விவாதம் செய்வதையே விரும்புகிறேன்' என ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுவாக கோடிட்டுக் காட்டினார் ஸ்டாலின். வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு பிரச்சினையை ஜி.கே.மணி பேசியதற்கு, "அது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்" என்றார் ஸ்டாலின். மூன்றாம் நாள் பேரவை நிகழ்வின் போது, தங்கமணியும் வேலு மணியும் அரங்கத்திற்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஜி.கே.மணியிடம், "மின்சாரம் பற்றியும் டாஸ்மாக் பத்தியும் எடப்பாடி பேசியதற்கு ஆளும் கட்சியிலிருந்து மறுத்துப் பேசுகிறார்கள். அப்போ நீங்க எங்களுக்கு சப்போர்ட்டாக பேச வேண்டாமா ஆளும் கட்சியை புகழ்ந்து பேசறீங்க" என்று கோபமாகக் கேட்டனர்.
அதற்கு, "இடஒதுக்கீடு பிரச்சினையிலேயே இருந்துட்டேன்" எனச் சொல்லி சமாளித்தவாறே அங்கிருந்து அகன்று விட்டார் ஜி.கே.மணி. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ.விடம் நாம் பேசியபோது, "கலைஞர் ஆட்சியின்போதும், ஜெயலலிதா ஆட்சியின் போதும் நான் எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறேன். இப்போது ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியிலும் இருக்கிறேன். கலைஞர் ஆட்சியில் விவாதங்களும் சுவராஸ்யங்களும், எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு அதிக வாய்ப்பும் மரியாதையும் இருக்கும். ஆனா, இவை ஜெயலலிதா ஆட்சியில் இருந்தது கிடையாது. அதனை ஒப்பிடுகிறபோது, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்தப் பேரவை கலைஞர் ஆட்சியை கண்முன் நிறுத்துவதைப் போல இருக்கிறது. பேசுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு அதிக வாய்ப்பும், ஆளும் கட்சிக்கு குறைவான வாய்ப்பும் தந்திருப்பது இந்த சட்டப்பேரவைதான். மேலும், மக்கள் பிரச்சினைக்காக நடந்த அறப்போராட்டங்களின்போது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுத்திருந்தேன். ‘வழக்குகள் வாபஸ் பெறப்படும்' என தனது இறுதி உரையில் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்" என்றார் வேல்முருகன்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான ஐவாஹிருல்லாவிடம் பேசியபோது, "முதல்வர் ஸ்டாலின்கூட தனது உரையை 43 நிமிடத்தில் முடித்துக்கொண்டார். - ஆனா, 2 மணிநேரம் பேசினார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி. பழனிச்சாமி. அவர் பேசி -முடிக்கும் வரையில் முதல்வர் ஸ்டாலின் ஓப்புதலுடன், சபாநாயகர் அனுமதித்தது பேரவை இதுவரை கண்டிராத புதுமை. முதல்வரின் இறுதி உரைக்குப் பிறகு அதன்மீது உறுப்பினர்கள் கருத்துக்கள் சொல்லலாம். முந்தைய காலங்களில் இதற்கு அனுமதியில்லை. ஆனால், ஸ்டாலின் இதனை அனுமதித்தது ஆரோக்கியமான ஜனநாயக நெறிமுறை.‘குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுவோம்' என ஸ்டாலின் சொல்லியிருப்பது சிறுபான்மையினர் மீதான அக்கறையைக் காட்டுகிறது" என்றார் அழுத்தமாக. முந்தைய எடப்பாடி அரசு தாக்கல்செய்யாத சி.ஏ.ஜி. அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மின் உற்பத்தி, நிலக்கரி மேலாண்மை, மின்சாரத்துக்கு அதிக விலை என பல ஆயிரம் கோடிகள் இழப்பை ஏற்படுத்திய முந்தைய எடப்பாடி அரசை குட்டு வைத்திருக்கிறது தணிக்கைத் துறையின் ரிப்போர்ட்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு இறுதியாக பதிலுரைத்த முதல்வர் ஸ்டாலின், "கொரோனா நெருக்கடியை கட்டுப்படுத்தியது குறித்து விரிவாகப் பேசிவிட்டு, தமிழ்நாட்டின் நிதிநிலையை சீர்படுத்துவதே இந்த அரசின் முதல் பணி. இதையெல்லாம் மனதில் நிறுத்தித் தான் பொருளாதார ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளோம். அடக்கப்பட்ட யானைக்குத்தான் மணி கட்டுவார்கள். யாராலும் அடக்க முடியாத யானை தி.மு.க. சமூகநீதி, சுயமரியாதை, மொழி-இனப்பற்று, மாநில உரிமை ஆகியவையே அதன் பலமான கால்கள். அதில்தான் இந்த அரசு நிற்கிறது. ஒன்றிய அரசு என்பதில்தான் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருக்கிறது. அதனால் ஒன்றிய அரசு என்பதை சொல்லிக் கொண்டே இருப்போம். மாநில உரிமைகளுக்கான எங்கள் முழக்கம் தொடரும். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்" என்றார் மிக அழுத்தமாக. இந்த கூட்டத்தொடரில் முந்தைய அரசின் மின்சாரத்துறை ஊழல், பயிர்க்கடன் மோசடி, அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள் என பல விசயங்கள் அம்பலமாகியிருக்கிறது. தவிர, வேளாண் சட்டங்கள், 8 வழிச் சாலை, சி.ஏ.ஏ., ஹைட்ரோகார்பன் உள்ளிட்டவைகளுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வருவதையும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதையும் உறுதி செய்திருக்கிறது. இதனையடுத்துதேதி குறிப்பிடாமல் சபையை ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு. எதனை நோக்கி இந்த அரசு செல்கிறது என்பதை முதல் கூட்டத்தொடரிலேயே கோடிட்டுக் காட்டியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.