இன்று ஓய்வுபெற்ற டி.ஜி.பி ஜே.கே திரிபாதி-க்கு தமிழ்நாட்ய் காவல் துறை சார்பில் பிரிவு உபசார விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது.
கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகத்தின் 29வது டி.ஜி.பி-யாக பதவியேற்ற ஜே.கே திரிபாதி தனது 2 ஆண்டு பதவிக்காலத்தை சிறப்பாக முடித்து இன்றுடன் ஓய்வு பெற்றார். 30வது டி.ஜி.பி-கப் இன்று பொறுப்பேற்றுள்ள சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்-ஐ பதவியில் அமர்த்தி இன்று காலை காவல் துறையிலிருந்து பிரியா விடை பெற்றார் ஜே.கே திரிபாதி.
ஆங்கிலேயர் காலத்து முறையான Police Pulling எனப்படும் வடம் கட்டப்பட்ட காரில் அவரையும் அவரது மனைவியையும் அமர்த்தி காவல்துறை உயர் அதிகாரிகள் அதனை இழுத்துச் சென்று வாயில் வரை கொண்டு சென்று தங்களை இதுநாள் வரை சிறப்பாக வழிநடத்தியமைக்கு நன்றி தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் ஓய்வு பெற்ற டி.ஜி.பி ஜே.கே திரிபாதி-க்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. விழாவில் கூட்டுக் குழுவினரின் வாத்தியங்கள் முழங்க சிறப்புக் காவல் படையினர், சிறப்பு கமாண்டோ படையினர், கடலோரப் காவல்படை, தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழு, நீலகிரி மாவட்ட காவல் குழுவினர், ஆயுதப்படை வீரர்கள், குதிரைப்படை வீரர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை திறந்த வாகனத்தில்ச் சென்று ஓய்வு பெற்ற டி.ஜி.பி ஜே.கே திரிபாதி ஏற்றுக்கொண்டார்.
பிரிவு உபசார விழாவில் டி.ஜி.பி சைலேந்திரபாபு, அவரின் மனைவி சோஃபியா, கூடுதல் டி.ஜி.பி-க்கள் கரண் சின்ஹா, ஷக்கீல் அக்தர், அமல்ராஜ், ரவி, தாமரைக் கண்ணன், கந்தசாமி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், பிற ஐ.பி.எஸ் அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, தனக்கு மிக முக்கிய பொறுப்பை வழங்கி பெருமைப் படுத்திய தமிழக முதலமைச்சருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓய்வு பெற்ற டி.ஜி.பி ஜே.கே திரிபாதி தனது பணியின்போது தனித்திறமை படைத்தவராகவும் சிறந்த பண்புகளைக் கொண்டவராகவும் திகழ்ந்து வந்துள்ளார்.
துணை ஆணையர், ஆணையர் என எந்தப் பதவி வகித்தாலும் தனது கடமையை சிறப்பாக ஆற்ற மிகவும் கடுமையாக உழைத்த ஜே.கே திரிபாதி ஒரு சிறந்த தலைவராவார். ஜே.கே திரிபாதி-க்கு மகிழ்ச்சியான ஓய்வுக்காலம் அமைய வேண்டும்.
அதனை தொடர்ந்து பேசிய ஓய்வுபெற் டி.ஜி.பி ஜே.கே திரிபாதி, தமிழகத்தின் புதிய டி.ஜி.பி-யாக பதவியேற்றுள்ள சைலேந்திர பாபு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 1985 ஆம் ஆண்டு தொடங்கிய எனது காவல்துறை பணியை 36 ஆண்டுகாலம் சிறப்பாக ஆற்றி இன்று ஓய்வு பெறுகிறேன்.
எனக்கு காவல் பணியில் இந்த பெருமையை வழங்கிய தமிழக அரசுக்கும், உடன் பணியாற்றிய அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது ஓய்வு நாளில் சிறப்பாக அணிவகுப்பு மரியாதை அளித்த காவல்துறையினருக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன். ஒடிசா மாநிலத்தில் பிறந்த எனக்கு வாழ்வளித்த தமிழகத்தையே எனது சொந்த மண்ணாக நினைக்கிறேன்.
பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் தமிழக மக்களுக்கு எனது சேவையை தொடர்ந்து ஆற்றுவேன் எனவும் தமிழகமே எனது தாய் வீடு என உருக்கமாக பேசினார்.
ஓய்வுபெற்ற டி.ஜி.பி ஜே.கே திரிபாதி-க்கு கூடுதல் டி.ஜி.பி ரவி நினைவுப் பரிசினை வழங்கி கௌரவித்தார்.