தமிழ்நாடு

விவசாயிகளுக்கு ஆதரவாக ஒலிக்கும் போராட்டக் குரல்: ஜூன் 26ல் போராட்டம் அறிவித்தது அனைத்து தொழிற்சங்கங்கள்!

கொத்துக் கொத்தாய் கொன்று குவித்து, கொரானா தாண்டவமாடிய போது, ஏராளமான குளறுபடிகளை செய்து ஒன்றிய அரசு மக்களைக் கைவிட்டு விட்டது.

விவசாயிகளுக்கு ஆதரவாக ஒலிக்கும் போராட்டக் குரல்: ஜூன் 26ல் போராட்டம் அறிவித்தது அனைத்து தொழிற்சங்கங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஜூன் 26: ஒருமைப்பாடு நாள்- ஆர்ப்பாட்டம். விவசாயம் காப்போம்-ஜனநாயகம் காப்போம் என அனைத்து தொழிற்சங்கங்களும் கூட்டறிக்கை விடுத்துள்ளன.

அதன் விவரம் பின்வருமாறு:-

டெல்லி மாநகரின் எல்லைகளில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் ஜூன் 14 ஆம் தேதியோடு 200 நாளை நிறைவு செய்கிறது. மூன்று வேளாண் சட்டங்களையும் மின்சார திருத்த சட்டத்தையும் திரும்பப் பெறக் கோரி, விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்தக் கோரி, துளைக்கும் பனியிலும், கொட்டும் மழையிலும், எரிக்கும் வெயிலிலும் தொடர்ந்து விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை 500க்கும் மேற்பட்ட தோழர்கள் களத்திலேயே உயிரிழந்திருக்கிறார்கள். விவசாயிகளை மட்டுமன்றி தொழிலாளர்களுடைய உரிமைகளை முற்றாக பறிக்கும் 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளையும், கார்ப்பரேட் ஆதரவு ஒன்றிய அரசு நிறைவேற்றி இருக்கிறது.

நாடு முழுமையும் பாஜகவின் சர்வாதிகார ஆட்சி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சின்னஞ்சிறு தீவான லட்சத்தீவுகளைக்கூட அது விட்டு வைக்கவில்லை. கொத்துக் கொத்தாய் கொன்று குவித்து, கொரானா தாண்டவமாடிய போது, ஏராளமான குளறுபடிகளை செய்து ஒன்றிய அரசு மக்களைக் கைவிட்டு விட்டது. ஜூன் 26ஆம் தேதி புகழ்பெற்ற விவசாயிகள் தலைவர் தயானந்த சரஸ்வதி அவர்களின் நினைவு தினமாகும். அன்று மாநிலத் தலைநகர்களில் ஆளுநர் மாளிகை முன்பு விவசாயிகள் போராட்டங்களை நடத்துகிறார்கள்.

விவசாயிகள் போராட்டத்தில் தொழிற்சங்க தலைவர்கள் நேரடியாக சென்று ஆதரவு தெரிவிப்பதோடு அனைத்து மாவட்டங்கள் மற்றும் தொழில் மையங்களில் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களை நடத்த அனைத்து மத்திய சங்கங்களின் கூட்டு குழு அறிவித்துள்ளது.

1. நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகள் 3 வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்டம் ஆகியவற்றை திரும்பப் பெறு!

2. விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டபூர்வமாக உறுதிப்படுத்து!

3. குறிப்பிட்ட காலவரையறைக்குள் இந்தியா முழுமையும் அனைவருக்கும் கட்டணமின்றி இரு முறை தடுப்பூசி செலுத்து!

4. வருமான வரி கட்டும் அளவுக்கு வருவாய் இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் 7,500 ரூபாய் நிவாரணத் தொகையும், ஒவ்வொருவருக்கும் 10 கிலோ உணவுப் பொருட்களும் வழங்கு!

5. பொதுத்துறை நிறுவனங்களையும் அரசுத் துறைகளையும் தனியார் மயப்படுத்தும் கொள்கைகளை கைவிடு!

6. இந்த கிருமி தொற்று காலத்திலும், இரவு பகலாய் உழைக்கும்‌ உள்ளாட்சி, துப்புரவுப் பணி, ரயில்வே, போக்குவரத்து, நிலக்கரி, பாதுகாப்பு -உருக்கு-பெல் தொழிற்சாலைகள், தொலைத்தொடர்பு, அஞ்சல், வங்கிகள், காப்பீடு, மின்சாரம், குடிநீர், கல்வி, மருத்துவப் பணிகள், பிராவிடண்ட் பண்ட், துறைமுக ஊழியர்கள் அனைவரையும் முன்களப் பணியாளர்களாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்கு!

7. ஆஷா அங்கன்வாடி துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து முன்கள பணியாளர்களுக்கும் ரூ. 50 லட்சம் காப்பீடு செய்! கொரானாவால் இறந்த பணியாளர்களின் குடும்பத்துக்கு பொருத்தமான நிவாரணம் வழங்கு!

தோழர்களே!

தமிழ்நாட்டில் ஜூன் 26ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் தொழில் மையங்களில் அனைத்து தொழிற்சங்க ஆர்ப்பாட்டங்களை திட்டமிட்டு நடத்திட வேண்டுகிறோம். தவறாமல் பொதுமுடக்க விதிகளை கடைபிடிக்க கோருகிறோம்.

ஊடகங்களுக்கு தகவல் சொல்லி ஆர்ப்பாட்ட நிகழ்வுகளை பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் வருவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யவும். ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்போர், கொடிகளையும் கோரிக்கை அட்டைகளையும், பளிச்சென தெரியும் வகையில் கையில் ஏந்தி இருப்பது அவசியம்.

சென்னையில் சின்னமலை ராஜீவ் காந்தி சிலை அருகில் விவசாய சங்கங்கள் தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். சென்னையில் உள்ள தொழிற்சங்கங்களின் தோழர்கள், அங்கு வந்து பங்கேற்று, விவசாயிகளுக்கு நமது ஒருமைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.”

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories