கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் உட்கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் உள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை அயனாவரத்தில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தனியார் நிறுவனங்களால் பெறப்பட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்களை அமைச்சர்கள் ரிப்பன் வெட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
ஆய்வுக்குப் பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “சென்னை அயனாவரம் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 50 படுக்கைகள் மட்டுமே தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று முழுமையாக குறைந்த வருவதை இது எடுத்துக்காட்டுகிறது. மேலும் ஆக்சிஜன் படுக்கைகள் போதுமான அளவில் தயார் நிலையில் உள்ளன.
கொரோனா மூன்றாம் அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள், குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பு மையங்கள் என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் உட்கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் உள்ளன.
தமிழ்நாட்டிற்கு தேவையான தடுப்பூசிகள் ஒன்றிய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு பரிந்துரைக்கும் தடுப்பூசிகளையே தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு செலுத்தி வருகிறது. கூடிய விரைவில் மாநிலத்தில் உள்ள அனைவருக்குமான தடுப்பூசிகள் செலுத்தப்படும்.
60 வயதிற்கு மேற்பட்ட நீரிழிவு நோய், இதய பிரச்சனை, உடல் பருமன் கொண்ட நோயாளிகள் பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் நீரிழிவு, உடல் பருமன், இதய பிரச்சனை கொண்ட நோயாளிகளுக்கு வீட்டிற்கே சென்று அதற்கான தடுப்பு மருந்துகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் இத்திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அறிமுகப்படுத்த உள்ளார்” எனத் தெரிவித்தார்.