கொரோனா இரண்டாவது அலையால், வாழ்வாதரம் இன்றி தவிக்கும் மக்களுக்கு நிவாரணத் தொகையை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு.
குறிப்பாக, கொரோனா காலத்தில் மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 இரண்டு தவனையாக வழங்கியுள்ளனர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதுமட்டுமல்லாது, தமிழகத்தில் கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சுமையை கருத்தில் கொண்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ கோதுமை மாவு, 1 கிலோ உப்பு, 1 கிலோ ரவை, அரை கிலோ சர்க்கரை, அரை கிலோ உளுந்தம்பருப்பு, கால் கிலோ புளி, கால் கிலோ கடலை பருப்பு, 200 கிராம் டீ தூள், 100 கிராம் கடுகு, 100 கிராம் சீரகம், 100 கிராம் மஞ்சள் தூள், 100 கிராம் மிளகாய் தூள், 1 குளியல் சோப் (125 கிராம்), 1 துணி துவைக்கும் சோப்பு (250 கிராம்) ஆகிய 14 வகை பொருட்கள் அடங்கிய கொரோனா சிறப்பு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறது தமிழ்நாடு அரசு.
முன்னதாக, கொரோனா முழு ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு காய்கறி உள்ளிட்ட பழங்கள் எளிதாக கிடைக்கும் வண்ணம் கூட்டுறவு மூலம் நடமாடும் காய்கறி விற்பனை நிலையம் அமைத்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு விநியோகிக்க நீலகிரி மாவட்டத்தில் உள்ள இண்ட்கோ தேயிலைத் தூளைக் கொள்முதல் செய்தது தமிழ்நாடு அரசு. நீலகிரி மாவட்டத்தில் பிரதானத் தொழில் தேயிலை விவசாயம். மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. சுமார் 65 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் தேயிலை விவசாயம் செய்து வருகின்றனர். மேலும், சுமார் ஒரு லட்சம் பேர் தேயிலை விவசாயத்தைச் சார்ந்துள்ளனர்.
மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமாக 16 கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள் (இண்ட்கோ) உள்ளன. இதில், 30 ஆயிரம் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள், தங்கள் தோட்டத்தில் விளையும் பசுந்தேயிலைகளைப் பறித்துத் தொழிற்சாலைகளுக்கு விநியோகித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்குக் காலத்தில் முடங்கிக்கிடந்த தேயிலைத் தொழிலை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக, தமிழ்நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கும் சிறப்பு நிவாரண பொருட்களில் 200 கிராம் டீ தூளை வழங்கி வருகிறது தமிழ்நாடு அரசு.
இதன்மூலம் தமிழ்நாடு அரசு 4200 டன் இண்ட்கோசர்வ் தேயிலைத் டீ தூளைக் கொள்முதல் செய்து, ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. இதன்மூலம் வாழ்வாதரம் இன்றி தவித்த மக்களுக்கு கொள்முதல் உற்பத்தி மூலம் உதவி செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அப்பகுதி மக்கள் தங்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தொற்றுநோயின் இந்த சவாலான காலங்களில் நீலகிரிகளின் இண்ட்கோ சிறு தேயிலை விவசாயிகளுக்கு கிடைத்த பெரிய வரம். தமிழ்நாட்டில் உள்ள 30,000 ரேஷன் கடைகளுக்கு 4200 டன் ஊட்டி டீ தூள் வழங்குவதற்கான சாதனை முறையை எங்களுக்கு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.