கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழக நூலகத்தின் சுவரில் காவி நிற உடையணிந்து இருப்பதுபோல் திருவள்ளுவர் படம் அமைக்கப்பட்டு இருந்தது.
முன்னதாக திருவள்ளுவர் எவ்வித சமயச் சார்பும் அற்றவர் என்பதைக் குறிக்கும் வகையில், வெள்ளை உடையணிந்து உருவகப்படுத்தப்பட்டு தமிழ்நாட்டு அரசு சார்பில் முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேளாண்மைப் பல்கலைக்கழக நூலகத்தில் திருவள்ளுவர் படம் காவி நிறத்தில் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து உடனடியாக காவி உடையணிந்த திருவள்ளுவர் படம் மாற்றப்பட்டு வெள்ளை உடையணிந்த திருவள்ளுவர் படம் இன்று பொருத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “கோவை வேளாண் பல்கலைக்கழக நூலகத்தில் 2017-18ஆம் ஆண்டு அ.தி.மு.க அரசின் சார்பில் காவி நிறம் கொண்ட திருவள்ளுவரின் புகைப்படம் வைக்கப்பட்டது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனது கவனத்திற்கு வந்தவுடன் அதிகாரிகளை அழைத்துப் பேசி இப்போது அந்தப் படத்தை அகற்றிவிட்டு, தமிழ்நாடு அரசின் அதிகாரபூர்வமான திருவள்ளுவர் படம் அதே இடத்தில் பொருத்தப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.