ஒன்றிய அரசு எடுக்கும் அத்தனை முடிவுகளும் பெருநிறுவனங்களின் மனதை மட்டுமே குளிர்விக்கும் நடவடிக்கையாக உள்ளது என தினகரன் ஏடு தலையங்கம் தீட்டியுள்ளது.
‘தினகரன்’ நாளிதழில் வெளியான தலையங்கம் வருமாறு:-
2014 ல் மோடி தலைமையில் மத்தியில் பா.ஜ அரசு அமைந்த பிறகு பெருமுதலாளிகளுக்கு ஜாக்பாட் தான். அந்த அளவுக்கு வரிச் சலுகைகள், நிதி உதவிகள், ஊக்குவிப்புகள் என்று ஏராளமான திட்டங்கள் அவர்களை குறிவைத்தே நிறைவேற்றப்படுகின்றன.
இதோ 2020-21ம் நிதி ஆண்டில், அதாவது கொரோனா கோரத்தாண்டவம் ஆடி, ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதாரத்தை நிலைகுலைய வைத்த சூழலில், நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 7 சதவீதமாக சரிந்த போதும் கூட, பெருநிறுவனங்கள் வங்கியில் வாங்கிய கடன் தொகை ரூ.1.53 லட்சம் கோடி வராக்கடனாக மாற்றப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று சொன்னால் இந்த அரசின் ரத்த நாளத்தில் கூட பெருமுதலாளிகளின் முன்னேற்றம் தான் முக்கியமாக இருக்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள முடியும்.
வரலாறு காணாத உச்சமாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.97.74ஆகவும், டீசல் விலை ரூ.91.97 ஆகவும் உள்ளது. பெட்ரோல் ஒரு லிட்டர் விலையில் ரூ.32.90 ஒன்றிய அரசு வரியாகவும், மாநில அரசு ரூ.25.38 வரியாக வசூலிக்கிறது. அதே போல் டீசல் விலையில் ரூ.31.80 ஒன்றிய அரசு வரியும், மாநில அரசு ரூ.18.33 வரியாக வசூலிக்கிறது. மொத்தத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு பொதுமக்கள் கொடுக்கும் வரி மட்டும் ரூ.58.28.
அதே போல் டீசலுக்கு கொடுக்கும் வரி ரூ.50.13. 2017-18ல் 1.14 லட்சம் கோடி, 2018-19ல் ரூ.2.54 லட்சம் கோடி, 2019-20ல் ரூ.1.45 லட்சம் கோடி, 2020-21ல் ரூ.1.54 லட்சம் கோடி என கடந்த 4 வருடங்களில் மட்டும் கிட்டத்தட்ட ரூ.7 லட்சம் கோடி பெரு முதலாளிகள் வாங்கிய வங்கி கடன் வராக்கடனாக மாற்றப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.20 லட்சம் கோடி அளவுக்கு பெருநிறுவனங்களுக்கு கொரோனா ஊக்குவிப்பு நிதி உதவிகள் வேறு.
இவை எல்லாம் மக்கள் பணம். நமது வரிப்பணம். வங்கி ஏடி.எம்.மில் பணம் எடுத்தால் ரூ.25 கட்டணம். பணம் இல்லை என்றால் அதற்கும் கட்டணம் என்று அத்தனை வங்கி கணக்குகளில் இருந்தும் பணத்தை வசூலிக்கும் உத்தரவுகள் மட்டும் பிறப்பிக்கப்பட்டு வங்கிகள் வளமாக்கப்பட்டு, அந்த பணம் பெரு முதலாளிகள் வசம் ஒப்படைக்கப்படுகிறது.
அதன்பின் வராக்கடனாக மாற்றப்பட்டு தள்ளுபடி செய்யப்படுகிறது. மொத்தத்தில் ஒன்றிய அரசு எடுக்கும் அத்தனை முடிவுகளும் பெருநிறுவனங்களின் மனதை மட்டுமே குளிர்விக்கும் நடவடிக்கையாக உள்ளன. ஆனால் ரூ.35 ஆயிரம் கோடி செலவழித்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போட உத்தரவிட உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டியது இருக்கிறது. ஜன்தன் யோஜனா திட்டத்தில் இன்று வரை 41 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
பெரும்பாலானவை ஏழை, எளிய மக்கள் வசம் உள்ளவை. தமிழக அரசு ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.4 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கியது போல் அந்த வங்கி கணக்குகளுக்கு நிதி உதவி அளித்து இந்த பேரிடர் நேரத்தில் ஒன்றிய அரசு ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்து இருக்கலாம். ஆனால் அதற்கும் ஒரு மனம் வேண்டும்.