சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஏழுகிணறு பகுதியில் கொரோனோ நிவாரண நிதி ரூ. 2,000 மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் பொதுமக்களுக்கு வழங்கினர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தயாநிதி மாறன் எம்.பி,“ கொரோனா ஊரடங்கின்போது கடந்த ஆட்சியில் 5 ஆயிரம் வழங்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்தினோம். தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, கடந்த மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது, இரண்டாவது தவணையாக 2 ஆயிரம் ரூபாய் மற்றும் மளிகை பொருட்களை அடங்கிய தொகுப்பை வழங்கி வருகிறோம்.
‘சொல்வதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம்’ என்ற வாக்கிற்கு ஏற்ப முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகள் உள்ளன. மேலும் முதலமைச்சர் பதவிக்கு வந்த நாள் முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். தற்போது கொரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறார்.
அதேபோல், அரசு கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பொதுமக்கள் விதிமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே கொரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும். எய்ம்ஸ், ஜிப்மர் கல்லூரிகளில் நீட் தேர்வு இல்லை நுழைவுத்தேர்வு தனித்தனியாக நடத்தப்படுகிறது. தமிழகத்திற்கும் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்" என்றார்.