பண்டைய காலம் தொட்டே தமிழர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள் என்பதை கீழடி, ஆதிச்சநல்லூர் பகுதிகளில் நடந்த அகழாய்வு தெளிவுப்படுத்துகின்றன. சிவகங்கை மாவட்டம், கீழடியில் 7-ம் கட்டஅகழாய்வுப் பணிகள் தொல்லியல்துறை மூலம் நடைபெற்று வருகிறது. கொரோனா 2-வது அலை பரவலால் சில வாரங்கள் நிறுத்தப்பட்ட அகழாய்வு, கடந்த 8-ந் தேதி முதல் மீண்டும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளை நேரில் பார்வையிட்டனர்.
அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட பொருட்களை பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:- வைகை நதி நாகரிகம் தமிழ் சமுதாயத்தின் தாய்மடி ஆகும். வைகை சமவெளியான கீழடியில் கண்டறியப்பட்ட பண்டைய கால மக்களின் வரலாற்று சின்னங்கள் உலகையே வியப்பில் ஆழ்த்திவிட்டது.
அந்தச் சான்றுகள் தமிழனை தலை நிமிர வைத்துள்ளன. 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் நாகரிகத்தை அறியும் வண்ணம் எழுத்து வடிவிலான சுவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. கீழடியில் தற்போது நடைபெறும் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் தங்கத்தினாலான அரியவகை தண்டட்டி, குறுவாள் மற்றும் 13 வகை எழுத்துகள் அடங்கிய மண்பானையிலான சுவடிகள், புதிய கற்காலகருவிகள் என பல்வேறு வகையான பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை 700-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன. இதுபோல் கீழடியை சுற்றி கொந்தகை, அகரம், மணலூர் போன்ற பகுதிகளில் தொல்லியல் துறையின் மூலம் அகழ்வாராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பழமைவாய்ந்த சங்ககால பொருட்கள் கிடைத்துள்ளன.
இந்த அரியவகை பொருட்களை தமிழறிஞர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ - மாவியர்கள் என அனைவரும் பார்த்து தெரிந்துகொள்ளும் வகையில் அருங்காட்சியகத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.