தமிழ்நாடு

“பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகர் ஆக்க நடவடிக்கை எடுக்கப்படும்”: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!

பெண்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகர் ஆக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

“பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகர் ஆக்க நடவடிக்கை எடுக்கப்படும்”: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அர்ச்சகர் பயிற்சி பெற விரும்பும் பெண்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு அனைத்து துறைகளும் புத்துயிர் பெற்று சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அண்மையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் சொத்து விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார். அதன்படி இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் ஆவணங்கள் www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் கடந்த 9ஆம் தேதி வெளியிடப்பட்டன.

இந்நிலையில், பெண்களையும் அர்ச்சகராக்கும் திட்டம் இருப்பதாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும். அதற்கான பயிற்சியை அரசு தொடர்ந்து வழங்கும். மேலும் பெண்கள் அர்ச்சகராக விரும்பினால் அவர்களுக்கும் தனி பயிற்சி கொடுக்கப்படும்.

கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகரின் பெயர் மற்றும் தொடர்பு எண் கொண்ட பலகை வைக்கப்படும். எந்தெந்தக் கோயில்களில் அர்ச்சகர் பற்றாக்குறை இருக்கிறதோ, அங்கெல்லாம் உடனே காலியிடங்கள் நிவர்த்தி செய்யப்படும்.

திருக்கோயில் பணியாளர்களை நேரடியாக அரசு விளம்பரம் செய்து பணியிடங்களை நிரப்புவது, அரசு தேர்வாணையம் மூலம் பணியாளர்களை நியமிப்பது என பலகோணங்களை விவாதித்தோம். பணி நிரந்தரம் செய்யப்படவேண்டியவர்கள் எவ்வளவு நபர்கள் என விரிவாக பேசியிருக்கிறோம். விரைவாக ஆலோசித்து காலியிடங்களை நிரப்பும் வேலைகளில் ஈடுபட்டுள்ளோம்.

கொரோனா தொற்று காரணமாக சில கோயில்களில் நான்கு கால பூசை, ஒரு கால பூசை மட்டுமே நடைபெறுகிறது. கொரோனா பரவல் குறைவதை பொறுத்து, கொரோனா சோதனை செய்து அர்ச்சகர்கள் முழுமையாக பணியாற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், கோயில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின்கீழ், அடுத்த 100 நாட்களில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக இருப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories