ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் சுமார் 750 அடி உயரமுள்ள செங்குத்தான பாறை மீது அமைந்துள்ளது. இதனால் பக்தர்கள் தரிசனம் செய்ய ரூ.9.50 கோடி மதிப்பீட்டில் ரோப் கார் அமைக்கும் பணி 2014-ம் ஆண்டு தொடங்கியது. தற்போது 90 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் ரோப் கார் பணிகளை ஆய்வு செய்ய இன்று திடீரென வருகை தந்தார். பின்னர், பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து, ரோப் கார் அமைந்துள்ள பகுதிக்கும் பக்தர்களின் வாகனம் நிறுத்துமிடத்துக்கும் அதிக தொலைவு உள்ளது. எனவே வாகன நிறுத்துமிடத்தை ரோப் கார் பகுதிக்கு மிக அருகில் அமைப்பது குறித்து ஆய்வு செய்யும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, ரோப் கார் பணிகள் தாமதமாவதற்கு காரணம் என்ன என்று அதிகாரிகளிடம் கேட்டார். அப்போது அவர்கள், கேபிள் இணைப்புப் பணிகள் முடிந்துவிட்டது, பெட்டிகளைப் பொருத்தி சோதனை செய்து பார்க்கவேண்டும். இது நடைபெற மூன்று மாதங்கள் ஆகும் எனத் தெரிவித்தனர்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மாதம் ஒருமுறை ஆய்வு செய்து ரோப் கார் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என அதிகாரிகளிடம் கூறினார்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் மலைக் கோவிலுக்கு ரோப் கார் அமைக்கும் பணி முடிக்கப்பட்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
தமிழ்நாட்டில் கோவில் நில ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் பார்க்காமல் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மலைப்பாதையில் செல்ல முடியாத பக்தர்களை டோலி மூலம் சுமந்து செல்லும் தொழிலாளர்களுக்கு, ரோப் கார் திட்டம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு மாற்றுப் பணிகள் வழங்கப்படும்" என்றார்.