தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44,121 கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கர் நிலம், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடு, கடைகள் உள்ளன. இதில், லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளது. இவற்றை மீட்கும் நடவடிக்கையில் அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது.
இந்தநிலையில், அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் உள்ள சொத்துக்கள் எங்கெங்கு இருக்கிறது என்பது தொடர்பாக தகவல்கள் யாருக்கும் தெரியவில்லை. மேலும், கோயில்களின் வரவு, செலவு உள்ளிட்ட விவரங்களும் கோயில் நிர்வாகத்தால் அறிவிப்பு பலகையில் ஓரிரு நாட்கள் மட்டுமே ஒட்டப்படுகிறது. இதனால், அது குறித்தும் யாருக்கும் தெரியவில்லை.
அதேபோன்று கோயில்களில் 3.37 லட்சம் சிலைகள், உலோக திருமேனிகள் உள்ளது. இந்த சிலைகள், கோயில் நகைகள் எவ்வளவு இருக்கிறது என்பது தொடர்பாகவும், அது எந்த காலத்தில் உருவாக்கப்பட்டது என்பதும் தெரியவில்லை. இதுதொடர்பான தகவல்கள் முழுவதும் ஆவணங்களாக அந்தந்த கோயில் அலுவலகங்களில் முடங்கிக் கிடக்கிறது.
இதுதொடர்பாக தகவல் தெரிய வேண்டுமென்றால் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பெற வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் அறநிலையத்துறை ஆணையராக பொறுப்பேற்றுள்ள குமரகுருபரன் கோயில் சொத்து, நகை, நிதி நிலை அறிக்கை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், பெரும்பாலான கோயில்களில் கணினி வசதி இல்லை. அறநிலையத்துறையில் மண்டல இணை ஆணையர், உதவி ஆணையர் நிலையிலான அதிகாரிகளுக்கு மட்டுமே கணினி வசதி உள்ளது. இதனால், ஆய்வர்களால் கோயில்களின் சொத்து, நகை, சிலை, விழாக்கள், நிதி நிலை அறிக்கை உள்ளிட் அனைத்து விவரங்களை பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது.
இதைத்தொடர்ந்து, ஆணையர் குமரகுருபரன் 36 உதவி ஆணையர் அலுவலகங்களில் தலா 3 கம்ப்யூட்டர் வீதம் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக எல்காட் நிறுவனத்துக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் கம்ப்யூட்டர் வந்தவுடன், ஊழியர்களுக்கு தேசிய தகவல் மையம் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதையடுத்து அனைத்து விவரங்களையும் இணைய தளத்தில்பதிவேற்றம் செய்யப்படும்.