தமிழகத்தில் பெருந்தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. மேலும் தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கொரோனா அதிகம் பாதித்த மாவட்டங்களுக்கு நேடியாக சென்று களஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.
அந்தவகையில் இன்று தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கள ஆய்வு செய்தார். பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
முன்னதாக, ஆண்டிபட்டி அருகே உள்ள மணியக்காரன்பட்டி என்ற கிராமத்தில் 110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதி தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு செய்தார்.
பின்னர், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஓடைப்பட்டி, வீரபாண்டி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை கள ஆய்வு செய்தார். இதையடுத்து கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஒருங்கிணைந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் போடி சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், தேனி மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, சட்டமன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன் (கம்பம்), மகாராஜன் ( ஆண்டிபட்டி), சரவணக்குமார் (பெரியகுளம் ), தி.மு.க வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச் செல்வன், சுகாதாரம், வருவாய்த்துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;- தேனி மாவட்டத்தில் கடந்த வாரங்களில் கொரோனா நோய்த் தொற்றின் பாதிப்பு 800 இருந்த நிலையில் தற்போது 500ஆக குறைந்துள்ளது. முதல்வரின் அறிவுறத்தலின்படி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவமனைகளில் ஆக்சிஜன், ஐ.சி.யு மற்றும் சாதரன படுக்கைகள் எவ்வளவு காலியாக உள்ளன பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.
தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் தற்போது இயங்கி வரும் 10,000 லிட்டர் கொள்ளவு கொண்ட ஆக்ஸிஜன் நிலையத்தினை 20,000 லிட்டர் கொள்ளவு கொண்ட ஆக்ஸிஜன் நிலையமாக உருவாக்கிட விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இது தவிர 50செறிவூட்டிகள் இந்த வாரத்திற்குள் தேனி மாவட்டத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தேனி மாவட்டத்தில் 74சதவீதம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏறக்குறைய 260க்கும் மேற்பட்ட இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் காய்ச்சல் முகாம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனா நோய் சிகிச்சைக்காக தேனி மாவட்டத்தில் தற்போது 7தனியார் மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. விரைவில் மேலும் 3தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
பொதுமக்களின் நலன் கருதி முதலமைச்சரின் காப்பீடுத் திட்டம் எந்தெந்த தனியார் மருத்துவமனைகளில் செல்லுபடியாகும் என்று மருத்துவமனைகளின் முகப்பில் விளம்பர பலகைகள் வைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளன.
45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக பெறப்பட்ட 80லட்சம் தடுப்பூசிகள் முழுவதும் போடப்படும் தருவாயில் உள்ளன. 18 முதல் 44வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக ரூ.85கோடியே 47லட்சம் மதிப்பில் 26 லட்சம் தடுப்பூசிகள் தமிழக அரசின் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டன. இவை அனைத்தும்; ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு முதற்கட்டமாக கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கு செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்பதே அரசின் நிலை. தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களே இல்லை என்கின்ற நிலையை உருவாக்குவதே அரசின் கொள்கை. தமிழகத்திற்குத் தேவையான உதவிகளை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்காக டெல்லியில் டி.ஆர்.பாலு முகாமிட்டுள்ளார். மத்திய அரசை குறை சொல்லும் சூழ்நிலை தற்போது இல்லை. மூன்றரை கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்வதற்கு உலகளாவிய ஒப்பந்தத்தை தமிழக அரசு கோரியிருக்கிறது.
இதற்கான டென்டர் ஜூன் 6ஆம் தேதிக்குள் முடிவுற்று தேர்ந்தெடுக்கப்படுவர்களால் 6 மாதத்திற்குள் தடுப்பூசி பெறப்படும். நிச்சயமாக 6 மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்து விடும். கொரோனா சிகிச்சைக்காக தமிழகத்தில் 100 மருத்துவமனைகள் திறக்க திட்டமிட்டு தற்போது 37 மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளது.
அதில் சித்தா மட்டுமல்லாது ஹோமியோபதி ஆயுர்வேதம் யுனானி மருத்துவ முறை சிகிச்சைகள் மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை மேற்கொள்ள நினைப்பவர்கள் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தும் தனியார் மருத்துவமனைகளை தேர்வு செய்து நோய்த்தொற்றை இலவசமாக குணப்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.