ஆக்சிஜன் பற்றாக்குறையால்தான் உயிரிழப்பு ஏற்படுகிறது என்ற எடப்பாடி பழனிசாமியின் கூற்று தவறானது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இன்று சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி, அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாகவும், ஆக்சிஜன் படுக்கைக்காக ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நோயாளிகள் இறக்கும் நிலை உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு கூடுதலாக 120 ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் மற்றும் 6 படுக்கைகள் கொண்ட கருப்புப் பூஞ்சை வார்டினை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு மற்றும் மக்களவை உறுப்பினர் தயாநிதிமாறன் ஆகியோர் தலைமையில், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ இன்று தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கொரோனா தடுப்புப் பணிகளை ஓ.பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வெகுவாகப் பாராட்டியுள்ளனர். கொரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பாராட்டு தெரிவித்தனர்.
தமிழகத்தில் மே 7-ம் தேதி வரை காபந்து அரசின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தார். அன்றைய நிலையில், ஆக்சிஜன் இருப்பு தமிழகத்தில் 230 மெட்ரிக் டன்னாக இருந்தது. இன்றைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய முயற்சியின் காரணமாக, ரூர்கேலா, துர்காபூர், ஜாம்ஷெட்பூர் ஆகிய ஊர்களிலிருந்து ஆக்சிஜன் பெறப்பட்டு இன்று தமிழகத்தின் ஆக்சிஜன் இருப்பு 650 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.
அதோடு மட்டுமல்லாமல், நாடாளுமன்ற தி.மு.க குழுத் தலைவர் டி.ஆர்.பாலு டெல்லியில் ஒரு வார காலம் முகாமிட்டு, தமிழகத்தின் தேவையை மத்திய அரசின் மூலம் கேட்டுப் பெற்றுள்ளார். ஆகையினால் ஆக்சிஜன் பற்றாக்குறையால்தான் உயிரிழப்பு ஏற்படுகிறது என்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கூற்று தவறானது” எனத் தெரிவித்தார்.