தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க வெளிமாநிலங்களில் இருந்து கண்டெய்னர் டேங்குகளிலும், லாரிகள் மூலமாகவும் ஆக்சிஜன் கொண்டு வரப்படுகிறது.
ஒடிசா மாநிலம் ரூர்கெலா பகுதியில் 90 மெட்ரிக் டன் ஆக்சிஜன் லாரிகளில் நிரப்பப்பட்டு ரயில் மூலமாக சென்னைக்கு எடுத்து வரப்பட்டது. ஆக்சிஜன் ஏந்திய லாரிகளை கொண்டு வந்த ரயில் நேற்று நள்ளிரவு சென்னை திருவொற்றியூர் பேசின்ரோட்டில் அமைந்துள்ள மத்திய அரசு நிறுவனமான கான்கார் கண்டெய்னர் யார்டு நிறுவனத்திற்கு வந்தடைந்தது
6 லாரிகளில் கொண்டு வரப்பட்ட திரவ ஆக்சிஜன் 7 லாரிகளில் மாற்றப்பட்டு அதில் 11 டன் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கும், 25 டன் ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கும், 20 டன் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளுக்கு தலா 10 டன் ஆக்சிஜனும் பிரித்து அனுப்பப்பட்டன.
மருத்துவ அவசர தேவைக்காக ஆக்சிஜன் லாரிகளில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டதால் லாரிகளை பாதுகாப்பாக அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல ஒவ்வொரு லாரிக்கும் தனியாக ஒரு காவல் துறை வாகனம் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டு காவல் துறையின் பாதுகாப்புடன் ஆக்சிஜன் சென்னை, மதுரை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.