சென்னையில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
“கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களுக்கே கருப்புப் பூஞ்சை நோய் அதிகம் உள்ளது. இந்த நோய் குணப்படுத்தக் கூடியதுதான். எனவே கருப்புப் பூஞ்சை தொற்றைக் கண்டு மக்கள் அச்சமடைய வேண்டாம்.
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இதுவரை இந்த நோயால் 9 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களும் நலமுடன் இருக்கின்றனர். மேலும் கருப்பு பூஞ்சை நோய் குறித்து ஆய்வு செய்ய 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தனியார் மருத்துவமனைகளில் கருப்புப் பூஞ்சை நோய் கண்டறியப்பட்டால் உடனே அரசுக்குத் தகவல் கொடுக்க வேண்டும். கருப்பு பூஞ்சை நோயால் தேவையற்ற பயமோ, பதற்றமோ வேண்டாம்.
மேலும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா தாக்கம் சற்று குறைந்துள்ளது. ஊரடங்கை மக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டுப் பதியில் இருக்கும் மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
கொரோனா பரவலில் பிற மாநிலங்களை விட தமிழகம் இரண்டுவாரங்கள் பின்தங்கி இருப்பதால் தற்போது பாதிப்பு அதிகரித்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை குறையும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.