தமிழகத்தில் தற்போது கொரொனா இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. இதற்காக அரசு மருத்துவமனை மற்றும் கோவிட் மையங்களில் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அறந்தாங்கி அரசு மருத்துவமனை மற்றும் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள கோவிட் மையங்களில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து, ஆக்சிஜன், உணவு மற்றும் உட்கட்டமைப்பு குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியோடு 70 படுக்கைகள் உள்ளன. இதில் 66 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு அவர்களுக்கு உரிய முறையில் ஆக்சிஜன் வசதி, மருந்து, மற்றும் சுகாதாரமுள்ள சத்தான உணவு வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது கொரொனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. அதைக் கட்டுப்படுத்தும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மூன்றாம் அலை பரவினாலும் அதை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை, எல்லா இடங்களிலும் போதுமான அளவு ஆக்ஸிஜன் வசதி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி வந்த அரசு தலைமை மருத்துவமனை மருத்துக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.