தமிழ்நாடு

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.69 கோடி நன்கொடை.. முதற்கட்டமாக ரூ. 50 கோடியை செலவிட முதல்வர் ஆணை!

கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ள நன்கொடையில் இருந்து கொரோனா சிகிச்சைக்கு நிதி ஒதுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.69 கோடி நன்கொடை.. முதற்கட்டமாக ரூ. 50 கோடியை செலவிட முதல்வர் ஆணை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மே 17ஆம் தேதி வரை இணையவழியில் ரூ.29.44 கோடி, நேரடியாக ரூ. 39.56 கோடி என மொத்தமாக ரூ. 69 கோடி நிதி பெறப்பட்டுள்ளது. இந்த நன்கொடை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு செலவிடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மருத்துவ நெருக்கடியும் - நிதி நெருக்கடியும் இணைந்து சூழும் இந்த நேரத்தில் மக்களைக் காக்கும் மகத்தான பணியில் மக்கள் தங்களைத் தாங்களே முன்வந்து ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றும், ஈகையும் இரக்கமும் கருணையும் பரந்த உள்ளமும் கொண்ட தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கை கொடுக்கின்ற வகையில் நிதி வழங்க வேண்டுமென்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மே 11 அன்று வேண்டுகோள் விடுத்தார்.

இவ்வாறு வழங்கப்படும் நன்கொடைகள் அனைத்தும் முழுமையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும், பெறப்பட்ட நன்கொடைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் குறித்த விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் எனவும் மாண்புமிகு முதலமைச்சர் உறுதியளித்தார். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல், உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்கி வருகின்றனர்.

நேற்று (17-5-2021) வரை இணையவழி மூலமாக 29.44 கோடி ரூபாயும், நேரடியாக 39.56 கோடி ரூபாயும் என, மொத்தமாக 69 கோடி ரூபாய் நிவாரண நிதியாகப் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, கொரோனா மருத்துவ சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்கு மனமுவந்து நன்கொடை அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பாக மனமார்ந்த நன்றியை மாண்புமிகு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள், கொரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதியளித்தவாறு, இதுவரை பெறப்பட்டுள்ள 69 கோடி ரூபாயிலிருந்து, ரெம்டெசிவிர் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காக 25 கோடி ரூபாயும், மற்ற மாநிலங்களிலிருந்து திரவ ஆக்சிஜனை இரயில் போக்குவரத்து மூலமாக கொண்டு வருவதற்குத் தேவையான கண்டெய்னர்களை வாங்குவதற்காக 25 கோடி ரூபாயும் என முதற்கட்டமாக மொத்தம் 50 கோடி ரூபாய் தொகையை செலவிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories