புதிய கல்விக்கொள்கை தொடர்பான கூட்டத்தை மாநில கல்வித்துறை அமைச்சர் உடன் நடத்துவதே ஏற்புடையது என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நாளை அனைத்து மாநில கல்வித்துறைச் செயலாளர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாக நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், புதிய கல்விக்கொள்கை தொடர்பான கூட்டத்தை மாநில கல்வித்துறை அமைச்சர் உடன் நடத்துவதே ஏற்புடையது என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இதுதொடர்பாக மத்திய கல்வி அமைச்சருக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு பின்வருமாறு: - “17/05/2021 அன்று இந்திய அரசின் கல்வியமைச்சர் மாநிலங்களின் கல்வித்துறைச் செயலாளர்களுடன் காணொளி கூட்டம் வாயிலாக கோவிட் நோய்த்தொற்று காலத்தில் கல்வி அமைப்பு மேலாண்மை, பள்ளிகளில் இணைய வழி கல்வி தொடர்வதற்கான வழிமுறைகள், புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்ததிலின் நிலை போன்றவை குறித்து கலந்துரையாட உள்ளதாக மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய கல்வி அமைச்சருக்கு 15/05/2021 அன்று எழுதியுள்ள கடிதத்தில், இக்கலந்துரையாடல் கூட்டத்தை தமிழக அரசின் கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயரதிகாரிகளுடன் நடத்துவதே ஏற்புடையதாக இருக்கும் எனவும் அக்கூட்டத்தில் மாநில அரசின் சார்பாக மிக முக்கியமான பொருண்மைகளான புதிய தேசிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்ததிலின் நிலை போன்றவற்றின் மீதான கருத்துக்களையும், பரிந்துரைகளையும் தாம் தெரிவிக்க தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.