தமிழகத்தில் கொரோனா சிகிச்சையை முறைப்படுத்த சென்னை - டி.எம்.எஸ். வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை (War Room) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முன்தினம் நள்ளிரவு, திடீரெனச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, அம்மையத்தை, தமது உறவினருக்கு படுக்கை உதவி கோரி தொலைபேசியில் சென்னையைச் சேர்ந்த அர்ச்சனா என்ற பெண்மணி தொடர்பு கொண்டார். அந்தத் தொலைபேசி அழைப்பினை முதல்வர் மு.க.ஸ்டாலின் கையாண்டு, பதிலுரைத்தார்.
அவர் பதில் கூறி முடித்ததும், தம்மிடம் பேசியது முதலமைச்சர்தான் என்பதறிந்து வியப்பிலும், மகிழ்ச்சியிலும் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த அப்பெண்மணி, முதலமைச்சருக்கு தமது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
தமது அந்த இன்ப அதிர்ச்சியை வெளிப்படுத்தி அர்ச்சனா ஊடகங்களிடம் கூறியதாவது:-
நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, "உங்களுக்கு என்ன உதவி வேண்டுமோ அதை நாங்கள் செய்கிறோம். உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று ஒருவர் கேட்டார். "என்னுடைய அத்தை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு மருத்துவமனையில் ‘பெட்’ வேண்டும்" என்றேன்.
"என்ன மாதிரி ‘பெட்’ வேண்டும்" என்று அவர் கேட்டார். " டீ2 வகை பெட் வேண்டும்" என்றேன். "உங்களுடைய அத்தை குறித்து மேலும் விவரங்கள் எங்களுக்கு வேண்டும்" என்றார். அவர் உரையாடிய பொழுது, "மு.க.ஸ்டாலின்" என்று பெயர் சொன்னார். மறுபடியும் நான் தொடர்பு கொண்டபொழுது, வேறொருவர் தொலைபேசியை எடுத்தார்.
"இதற்கு முன்பு யார் பேசினார் என்னுடன்?" என்று கேட்டேன். அவர், "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் உங்களுடன் பேசினார்" என்றவுடன், இருந்த அந்தப் பரபரப்பிலும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்த நேரத்தில், கண்ட்ரோல் அறையில் இருந்து தமிழக முதலமைச்சர், பொதுமக்களிடம் உரையாடியது, எனக்கு வியப்பாக இருந்தது.
என்னுடைய கஷ்டங்களைக் கேட்பதற்கு ஒருவர் அந்த நேரத்திலும் இருந்தார்; அவர் தமிழக முதலமைச்சர் என்கிற பொழுது, அந்தக் கஷ்டத்திலிருந்து விடுபட்டதுபோல இருந்தது எனக்கு. ‘பெட்’ கிடைப்பது சற்று சிரமமாக இருக்கும் இந்தத் தருணத்தில், முதலமைச்சரே உறுதியளித்து என்னோடு பொறுமையாகப் பேசியது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இவர் போன்ற ஒரு தலைவர்தான் எங்களுக்குத்தேவை!
இவ்வாறு அர்ச்சனா, ஊடகங்களிடம்தெரிவித்தார்