தமிழ்நாட்டில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்திட, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு அவசியமான மருத்துவ ஆக்சிஜன் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைக் கருத்தில்கொண்டு, மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகிறது தமிழக அரசு.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி ‘வார் ரூம்’ அமைக்கப்பட்டு, கொரோனா தடுப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா முதற்கட்ட நிவாரண நிதி ரூ.2,000 வழங்கும் பணி மாவட்ட ஆட்சியர் தலைமையில் கரூர் கோடாங்கிப்பட்டியில் இன்று நடைபெற்றது. மின் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி இந்நிகழ்வில் பங்கேற்று பொதுமக்களுக்கு நிவாரண நிதி வழங்கினார்.
தொடர்ந்து, கரூர் ஆண்டாங்கோவில் புதூரில் நடந்த நிகழ்ச்சியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவி வழங்கியபின் மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, “தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கைகளிலே அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. முதற்கட்டமாக 5 திட்டங்களுக்கு முதல்வர் கையெழுத்திட்டுள்ளார். மாதந்தோறும் மின் கணக்கீடு உள்ளிட்டவற்றுக்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
கரூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் 250 சிலிண்டர்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும். இதற்கான இயந்திரங்கள் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆட்சியருடன் தற்போது ஆய்வு செய்ய உள்ளேன்.” எனத் தெரிவித்தார்.