கொரோனா காரணமாக கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த 2 வருடங்களாக கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் சமீபத்தில் தேர்தலுக்கு முன் நடைபெற்று முடிந்த கல்லூரி மாணவர்களுக்கான ஆன்லைன் தேர்வு முடிவுகளில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதாக மாணவர்கள் தரப்பில் தொடர்ந்து அரசுக்கு புகார் வந்துள்ளது.
இந்நிலையில், புதியதாக உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பொன்முடி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் கல்லூரி தேர்வுகள் பிரச்சினை தொடர்பாக இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நடைபெற்று முடிந்த கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகளில் பலவித பிரச்சினை, பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தொடர்ந்து மாணவர்கள் தரப்பில் புகார் வந்துள்ளதாகவும் இதுகுறித்து துணைவேந்தர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து மாணவர்கள் தரப்பிடம் அவர்களது கருத்துகளை கேட்டறியப் பெற்று இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.