ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்ற தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ம் தேதி அன்று எண்ணப்பட்டதில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிக்கனியை ஈட்டியது. குறிப்பாக தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கட்டிலில் அமர இருக்கிறது.
இதனையடுத்து இன்று (மே 7) சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கொரோனா பரவல் காரணமாக எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெற்று வருகிறது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அதில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” எனத் தொடங்கி தன்னுடைய உறுதிமொழியை ஏற்றார். அவரை அடுத்து அமைச்சரவை சகாக்கள் ஒவ்வொவரும் ஒன்றன்பின் ஒன்றாக பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துக் கொண்டனர்.
இந்த பதவியேற்பு விழாவில் தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினரும், தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகளும், கூட்டணி கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.